(எம்.மனோசித்ரா)
'தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணி திரள்வோம்' என்ற தொனிப்பொருளில் இலங்கையின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ளன. அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் 80 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இந்நிகழ்வுகளை நடத்த உத்தேசித்துள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் எ.எச்.எம்.எச். அபேரத்ன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் வியாழக்கிழமை (30) இடம்பெற்ற 77 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் தொடர்பான ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் புதிய யுகத்தை ஆரம்பிக்கின்ற சுதந்திர தினமாக இம்முறை கொண்டாடப்படவுள்ள 77ஆவது சுதந்திர தின விழா அமையும்.
'தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணி திரள்வோம்' என்ற தொனிப்பொருளில் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் இம்முறை சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
அத்தியாவசியமானவற்றிக்கு மாத்திரம் வரையறுத்து, மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை குறைத்து, இம்முறை சுதந்திர தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சாதாரண பொதுமக்கள் சுதந்திர தின நிகழ்வை பார்வையிடுவதற்கு அதிகமாக இட வசதிகள் வழங்கப்படவுள்ளன. காரணம் சுதந்திர தினம் என்பது மக்களுக்கானதாகும்.
சுதந்திரத்தை வெற்றி கொள்வதற்காக அர்ப்பணிப்புச் செய்த பல்லாயிரக்கணக்கான தேசப்பற்றாளர்கள் உள்ளனர். எனினும், பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார ரீதியாக முழுமையான சுதந்திரத்தை அனுபவிக்கின்றோமா? என்ற கேள்வி இன்றும் எம் முன் இருக்கின்றது.
புதிய அரசியல் கலாசாரம் ஒன்றும் மற்றும் புதிய அணுகுமுறை ஒன்றும் இந்த நாட்டிற்கு அவசியமானதாகும். அதற்காக பெருமளவான மக்கள் அணி திரண்டுள்ளனர். அவ்வாறு அணி திரண்ட மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் இம்முறை சுதந்திர தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சகல இன மக்களுக்கும் முக்கியத்துவமளிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் சிங்கள மொழியைப் போன்று தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடப்படும்.
நாட்டின் சகல பிரஜைகளுக்கும் சமத்துவம் சிங்கள, தமிழ், முஸ்லிம் உட்பட சகல சமயத்தவர்களுக்கும் சகோதரத்துவத்துடன் செயற்படுகின்ற கனவை நனவாக்குவதற்கு இம்முறை 77 ஆவது சுதந்திர தின விழாவை பயன்படுத்த வேண்டும்.
No comments:
Post a Comment