பரிசோதனைகளின்றி விடுவிக்கப்பட்ட கொள்கலன்களுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை - மேல் மாகாண ஆளுநர் - News View

About Us

About Us

Breaking

Thursday, January 30, 2025

பரிசோதனைகளின்றி விடுவிக்கப்பட்ட கொள்கலன்களுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை - மேல் மாகாண ஆளுநர்

(எம்.ஆர்.எம்.வசீம்)

பரிசோதனைகள் எதுவும் இன்றி சுங்கத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் கொள்கலன்களுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் தெரிவித்தார்.

இலங்கை சுங்கத்தில் தீவிர பரிசோதனைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 323 கொள்கலன்கள் பரிசோதனை எதுவும் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தனக்கு எதிராக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தீவிர பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு சிவப்பு முத்திரை பதித்திருந்த 323 கொள்கலன்கள் சுங்கத்தில் இருந்து பரிசோதனை எதுவும் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவை எனக்கு சொந்தமானவை எனவும் ஒரு சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

எனக்கு எதிராக இவ்வாறு தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிப்பதுடன் அந்த கொள்கலன்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த கொள்கலன்களில் ஒன்று கூட எனது பெயரில் இல்லை.

குறித்த கொள்கலன்கள் எக்ஸ்போ லங்கா நிறுவனத்துக்கு சொந்தமானவை என பல்வேறு தரப்பினர் தெரிவித்து வருகின்றனர். ஆனால் எக்ஸ்போ லங்கா நிறுவனத்துக்கும் எனக்கும் தற்போது எந்த தொடர்பும் இல்லை.

மேல் மாகாண ஆளுநராக பதவி ஏற்பதற்கு முன்னர் குறித்த நிறுவத்தில் இருந்து முற்றாக விலகியுள்ளேன். என்றாலும் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் கவலையடைகிறேன்.

பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்திருக்கும் நாட்டை மீள கட்டியெழுப்ப எங்களால் முடிந்த சேவையை வழங்கும் நோக்கில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் வேண்டுகோளுக்கிணங்கவே மேல் மாகாண ஆளுநர் பதவியை ஏற்றுக் கொண்டேன்.

என்றாலும் அரசியல் நோக்கில் இவ்வாறான பொய் குற்றச்சாட்டுக்கள் எனக்கு எதிராக தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்பார்க்கிறேன் என்றார்.

No comments:

Post a Comment