விடுவிக்கப்பட்டவைகளில் எக்ஸ்போ லங்கா நிறுவனத்திற்குரிய எவ்வித கொள்கலன்களும் உள்ளடங்கவில்லை - இலங்கை சுங்கத் திணைக்களம் - News View

About Us

Add+Banner

Thursday, January 30, 2025

demo-image

விடுவிக்கப்பட்டவைகளில் எக்ஸ்போ லங்கா நிறுவனத்திற்குரிய எவ்வித கொள்கலன்களும் உள்ளடங்கவில்லை - இலங்கை சுங்கத் திணைக்களம்

24-65fa56bcaecd5
(இராஜதுரை ஹஷான்)

சுங்கத் திணைக்களத்தின் தரவுக் கட்டமைப்பின் ஊடாக இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களில் 60 சதவீதமானவை பௌதீக பரிசோதனையில்லாமல் விடுவிக்கப்பட்டுள்ளன. விடுவிக்கப்பட்ட கொள்கலன்களில் எக்ஸ்போ லங்கா என்ற நிறுவனத்தின் பெயரில் இறக்குமதி செய்யப்பட்ட எவ்வித கொள்கலன்களும் உள்ளடங்கவில்லை என இலங்கை சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஆயுதங்கள், தங்கம் அல்லது போதைப் பொருள் உட்பட சட்டவிரோதமான முறையில் பொருட்கள் நாட்டுக்குள் உள்வருவதற்கும், சுங்கத் திணைக்களத்தின் வருவாய் இழப்புக்கும் எவ்வித சாத்தியமும் கிடையாது என சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட 323 கொள்கலன்கள் சுங்க பரிசோதனைகளின்றி விடுவிக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தியை தெளிவுப்படுத்தி சுங்கத் திணைக்களம் விசேட ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கை சுங்கம் பண்டங்களை விடுவிக்கும் வழிமுறையாக 2020 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதல் அவதான நிலை முகாமைத்துவ கோட்பாடுகளுக்கமைய சுங்கத் திணைக்களத்தின் தரக்கட்டமைப்பு ஊடாக பௌதீக பரிசோதனைக்கு உட்படுத்தல், ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தல், பௌதீகம் மற்றும் ஸ்கேன் என்ற இரட்டை பரிசோதனைக்கு உட்படுத்தல், அத்துடன் பௌதீகம் மற்றும் ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் கொள்கலன்கள் விடுவித்தல் ஆகிய வழிமுறைகளை பின்பற்றுகிறது.

இந்த வழிமுறைகளுக்கமைய, பௌதீக பரிசோதனைகளுக்காக தெரிவு செய்யப்படும் கொள்கலன்கள் பல்வேறு காரணங்களினால் விடுவிப்பதற்கு தாமதிக்கப்படுகிறது. இதனால் கொள்கலன்கள் தேக்கமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

அத்தியாவசிய பண்டங்கள், கைத்தொழில் மற்றும் ஏனைய வர்த்தக நடவடிக்கைகளுக்குத் தேவையான மூலப் பொருட்கள் மற்றும் பல்வேறு இறக்குமதி பொருட்களை விடுப்பதில் ஏற்படும் தாமதம் தொடர்பில் சுங்கத் திணைக்களம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.

இந்த நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு சுங்கத் திணைக்களம் பல்வேறு நடவடிக்கைகளையும், மாற்றுத் திட்டங்களையும் தற்போது செயற்படுத்தியுள்ளது.

இதன் ஒரு அங்கமாக தேர்ச்சி பெற்ற சிரேஷ்ட உத்தியோகத்தர்களை உள்ளடக்கிய பரிசோதனை அலகு ஒன்றை உருவாக்கி அதனூடாக அவதானமிக்க கொள்கலன்கள் தெரிவு செய்யப்பட்டு விடுவிக்கப்படுகின்றன.

எவ்வாறிருப்பினும் சுங்கத் திணைக்களத்தின் தரவுக் கட்டமைப்பின் ஊடாக இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களில் 60 சதவீதமானவை பௌதீக பரிசோதனையில்லாமல் விடுவிக்கப்படுவதை குறிப்பிட வேண்டும்.

இந்த முறைமையை இலங்கை சுங்கத் திணைக்களத்தின் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் அங்கீகரித்துள்ளனர்.

சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகத்தின் மேற்பார்வையின் கீழ் 2024.07.18 ஆம் திகதி முதல் தெரிவு செய்யப்பட்ட ஒழுங்குமுறைகளுக்கமைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது.

பொருள் கட்டமைப்பு ஊடாக ஸ்கேன் செய்தல், கட்டண நிர்ணய நடடிக்கைகளை முடிவுறுத்தல், பண்டங்களை உறுதியாக அடையாளப்படுத்திக் கொள்வதற்காக முழுமையாக தகவல்களை சமர்ப்பித்தல், பல்வேறு இறக்குமதியாளர்களின் பொருட்களை ஒரு கொள்கலன்களில் உள்ளடக்காமை, தொடர்பில் புதிய ஒழுங்குமுறைமையில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

2024.07.18 ஆம் திகதி தேவைக்கேற்ப இந்த குழு பல தடவைகள் கூடி குறித்த ஒழுங்குமுறைகளுக்கு அமைய கொள்கலன்களை விடுவித்துள்ளன.

கொள்கலன்கள் நெருக்கடிக்கு தீர்வு காணும் பொருட்டு, அமைச்சரவையின் அனுமதியுடன் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரை மற்றும் ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய பல கொள்கலன்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளன.

குழுவின் செயற்பாட்டின் காரணமாக கொள்கலன் நெருக்கடிக்கு கணிசமான அளவு தீர்வு காணப்பட்டுள்ளதுடன், இதனால் பெருமளவிலான இறக்குமதியாளர்கள் குறைவான காலத்துக்குள், குறைந்த செலவில் தமது இறக்குமதி நடவடிக்கைகளை பூர்த்தி செய்துள்ளனர்.

மேற்குறிப்பிடப்பட்ட கொள்கலன்களில் எக்ஸ்போ லங்கா என்ற நிறுவனத்தின் பெயரில் இறக்குமதி செய்யப்பட்ட எவ்வித கொள்கலன்களும் உள்ளடங்கவில்லை.

ஆயுதங்கள், தங்கம் அல்லது போதைப் பொருள் உட்பட சட்டவிரோதமான முறையில் பொருட்கள் நாட்டுக்குள் உள்வருவதற்கும், சுங்கத் திணைக்களத்தின் வருவாய் இழப்புக்கும் எவ்வித சாத்தியம் கிடையாது.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *