காசா போர் நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்றத்தின் மூன்றாவது கட்டமாக மூன்று இஸ்ரேலியர் மற்றும் ஐந்து வெளிநாட்டவர்கள் என ஹமாஸ் போராளிகளால் எட்டு பணயக் கைதிகள் நேற்று (30) விடுவிக்கப்பட்டதோடு அதற்கு பகரமாக இஸ்ரேல் சிறைகளில் இருந்து 110 பலஸ்தீனர்கள் விடுவிக்கப்படவுள்ளனர்.
இஸ்ரேலிய பெண் இராணுவ வீராங்கனையான 20 வயது அகம் பர்கர் நேற்று முதலாமராக விடுவிக்கப்பட்டார்.
காசாவில் கடந்த 15 மாதங்களில் இஸ்ரேலின் கடும் தாக்குதல்களுக்கு இலக்காகி பெரும் சேதத்திற்கு உள்ளான ஜபலியா அகதி முகாமில் பெரும் எண்ணிக்கையான பலஸ்தீனர்கள் மற்றும் ஹமாஸ் போராளிகளின் முன்னிலையில் அவர் செஞ்சிலுவை சங்கத்திடம் கையளிக்கப்பட்டார்.
தொடர்ந்து இஸ்ரேலிய பெண் சிவில் பணயக் கைதியான அர்பல் யஹுத், தெற்கு காசாவில் கான் யூனிஸ் நகரில் உள்ள ஹமாஸ் முன்னாள் அரசியல் பிரிவு தலைவர் யஹ்யா சின்வாரின் வீட்டுக்கு வெளியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
குழப்பமான காட்சிகளுக்கு மத்தியில் ஐந்து தாய்லாந்து நாட்டவர்களும் செஞ்சிலுவை சங்க அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டிருந்ததாக இஸ்ரேல் இராணுவம் எக்ஸ் சமூகதளத்தில் குறிப்பிட்டுள்ளது.
கான்யூனிஸில் பணயக் கைதிகள் விடுவிக்கப்படும் இடத்திற்கு பெரும் திரளான பலஸ்தீனர்கள் கூடியதால் குழப்பமான சூழல் நிலவியது.
இந்நிலையில் 110 பலஸ்தீன கைதிகளும் இஸ்ரேலால் விடுவிக்கப்படவிருந்தனர். விடுவிக்கப்படும் பலஸ்தீனர்களில் 30 சிறுவர்கள் மற்றும் பலஸ்தீனர் போராட்டக் குழுக்களின் உறுப்பினர்கள் சிலரும் உள்ளனர். இவர்கள் மேற்குக் கரைக்கு அல்லது காசாவுக்கு அனுப்பப்படவிருந்தனர்.
இதில் பல இஸ்ரேலியர் கொல்லப்பட்ட தாக்குதல்களுக்காக சிறை வைக்கப்பட்ட பலஸ்தீன போராட்ட குழுவின் முன்னாள் தலைவர் ஒருவரான சக்கரியா சுபைதியும் விடுதலை செய்யப்படுபவர்களில் அடங்குகிறார்.
49 வயதான சுபைதி விடுதலை பெறும் 110 பலஸ்தீனர்களில் முக்கிமானவராக கருதப்படுகிறார்.
2000 களின் ஆரம்பத்தில் ஏற்பட்ட பலஸ்தீன எழுச்சிப் போராட்டமான இரண்டாவது இன்திபாதாவில் முன்னணி தலைவராக உருவான சுபைதி, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ஜெனின் அகதி முகாமில் பெரிதும் அறியப்படும் ஒருவராக உள்ளார்.
காசாவில் ஒரு வாரத்திற்கு முன் போர் நிறுத்தப்பட்டது தொடக்கம் மூன்றாவது முறையாகவே நேற்று கைதிகள் பரிமாற்றம் இடம்பெற்றது.
இதுவரை 15 இஸ்ரேலிய பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவித்திருப்பதோடு நூற்றுக்கணக்கான பலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்துள்ளது.
கடந்த 2023 ஒக்டோபரில் இஸ்ரேல் மீது பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதலின்போது கடத்தப்பட்ட சுமார 250 இஸ்ரேலிய பணயக் கைதிகளில் தொடர்ந்து 82 பேர் காசாவில் இருப்பதாக இஸ்ரேல் நம்புகிறது. இவர்களில் 30 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
காசாவில் 15 மாதங்களாக இஸ்ரேல் இடைவிடாது நடத்திய தாக்குதல்களில் 47,000 க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்ட நிலையில் போர் நிறுத்தத்தின் பின் இடிபாடுகளில் இருந்து நூற்றுக்கணக்காக சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் 42 சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
காசாவில் போர் நிறுத்தங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் இஸ்ரேலிய படையின் தாக்குதல்களில் ஒன்பது பேர் காயமடைந்திருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறிப்பாக போர் காலத்தில் இஸ்ரேலின் கடும் தாக்குதலுக்கு இலக்காகி இடிபாடுகளாக மாற்றப்பட்டிருக்கும் வடக்கு காசாவை நோக்கி இடம்பெயர்ந்த பலஸ்தீனர் தொடர்ந்து பயணித்து வருகின்றனர்.
அரை மில்லியனுக்கும் அதிகமான பலஸ்தீனர்கள் வடக்கை நோக்கி சென்றிருப்பதாக காசா அரச ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
காசாவில் போர் நிறுத்தம் எட்டப்பட்ட நிலையில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலியப் படை தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் டம்மௌன் சிறு நகரில் கடந்த புதன்கிழமை இரவு இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில் பத்து பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறிப்பாக ஜெனின் நகரில் இஸ்ரேலின் படை நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருவதோடு துல்கராமிலும் இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
No comments:
Post a Comment