புதிதாக 150 அம்பியூலன்ஸ்களை பெற அமைச்சரவைப்பத்திரம் சமர்ப்பிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, January 30, 2025

புதிதாக 150 அம்பியூலன்ஸ்களை பெற அமைச்சரவைப்பத்திரம் சமர்ப்பிப்பு

(செ.சுபதர்ஷனி)

நாடளாவிய ரீதியில் துரித சேவையை வழங்கி வரும் சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவைக்காக 150 புதிய அம்பியூலன்ஸ்களை பெறுவதற்கான அமைச்சரவைப்பத்திரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

ராஜகிரியவில் உள்ள சுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை மையத்தில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய நிதியுதவி திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட சுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை தற்போது அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

1990 சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவையை மேம்படுத்த புதிய வேலைத்திட்டங்களை ஒழுங்கமைப்பது அவசியம்.

ஊழியர்களின் சேவைக்கான கௌரவத்தை வழங்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதன் மூலம், ஊழியர்களை நீண்ட காலத்திற்கு சேவையில் தக்கவைத்துக் கொள்ள முடியும்.

ஊழியர்களுக்கு நியாயமான சம்பளத்தை வழங்குவதுடன், அவர்களுக்கான பயிற்சிகளை வலுபடுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்துவது அவசியம்.

ஊழியர் பற்றாக்குறையால் சேவைகளை முன்னெடுப்பதில் தடை ஏற்படும் சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு படையினரின் உதவியை பெறுவதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

மேலும் சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவைக்காக சுமார் 150 புதிய அம்பியூலன்ஸ்களை பெறுவதற்கான அமைச்சரவைப்பத்திரமும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை போன்ற அம்சங்களைக் கவனத்தில் கொண்டு சுற்றுலாப் பயணிகள் அதிகமாக கூடும் பகுதிகளில் இச்சேவையை மேலும் வலுப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது. நாடு தழுவிய ரீதியில் தற்போது சுமார் 322 சுவசெரிய அம்பியூலன்ஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்றார்.

No comments:

Post a Comment