நாட்டை வந்தடைந்தது முதல் தொகுதி உப்பு ! சுமார் 15 ஆண்டுகளுக்குப் பின் பொது நுகர்வுக்காக இறக்குமதி - News View

About Us

About Us

Breaking

Monday, January 27, 2025

நாட்டை வந்தடைந்தது முதல் தொகுதி உப்பு ! சுமார் 15 ஆண்டுகளுக்குப் பின் பொது நுகர்வுக்காக இறக்குமதி

(எம்.மனோசித்ரா)

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 1,485 மெட்ரிக் தொன் அடங்கிய முதலாவது உப்புத் தொகை இன்று (27) நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

இம்மாதம் 31 ஆம் திகதிக்குள் 12,500 மெற்றிக் தொன் உப்பு இறக்குமதி செய்யப்படவுள்ளதாக அரச வர்த்தகக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

உப்பை பொது நுகர்வுக்காக நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கு சுமார் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் இவ்வாறு முடிவு எடுக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

இந்தியாவிலிருந்து உப்பினைப் பெற்றுக் கொள்ள இரண்டு இறக்குமதியாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் அண்மைக் காலமாக நிலவும் உள்ளுர் உப்பு உற்பத்தியில் ஏற்பட்ட நிலைமையைக் கருத்திற் கொண்டு இவ்வாறு உப்பு இறக்குமதி செய்யப்படவுள்ளது.

இலங்கையின் உப்பு உற்பத்தி வீட்டுத் தேவைகளுக்கும் மற்றும் கைத்தொழில் தேவைகளுக்கும் நிலவும் கேள்வியைப் பூர்த்தி செய்வதற்காக போதுமானதாக அமைவதுடன், உப்பு விளைச்சல் குறிப்பாக காலநிலையில் தங்கியுள்ளது.

நாட்டில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக 2025 ஆண்டின் முதலாம் காலாண்டில் உள்நாட்டு சந்தையில் வீட்டுத் தேவைகளுக்கு மற்றும் கைத்தொழில் தேவைகளுக்கான உப்பு விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்படலாமென அவதானிக்கப்பட்டுள்ளது.

அதற்குத் தீர்வாக தயார் செய்து சந்தைக்கு விநியோகிப்பதற்கான தீர்வை வரி வீதத்திற்கமைய பதனிடப்படாத அயடின் சேர்க்கப்படாத 30,000 மெற்றிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குமாறு உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

அதற்கமைய, பதனிடப்படாத அயடின் சேர்க்கப்படாத 30,000 மெற்றிக் தொன் உச்ச அளவுக்கு உட்பட்ட உப்பை 2025-01-31 திகதி அல்லது அதற்கு முன்னர் வரையறுக்கப்பட்ட இலங்கை அரச வர்த்தக (பலநோக்கு) கூட்டுத்தாபத்தின் மூலம் இறக்குமதி செய்து உள்நாட்டு உப்பு உற்பத்தியாளர்கள் ஊடாக சந்தைக்கு வழங்குவதற்கு வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைச்சர், கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அமைச்சர் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment