ஜனாதிபதி அமைதி காப்பது ஏன்? இந்த அரசியல் கலாசாரத்தையா மக்கள் எதிர்பார்த்தார்கள்? - மனோஜ் கமகே - News View

About Us

Add+Banner

Breaking

  

Thursday, December 12, 2024

demo-image

ஜனாதிபதி அமைதி காப்பது ஏன்? இந்த அரசியல் கலாசாரத்தையா மக்கள் எதிர்பார்த்தார்கள்? - மனோஜ் கமகே

5
(இராஜதுரை ஹஷான்)

சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதாக நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சபாநாயகரின் கல்வித் தகைமை தொடர்பான சர்ச்சையில் அமைதி காப்பது ஏன்? இந்த அரசியல் கலாசாரத்தையா நாட்டு மக்கள் எதிர்பார்த்தார்கள்? சபாநாயகர் பதவிக்கான கௌரவம் மலினப்படுத்தப்பட்டுள்ளது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் மனோஜ் கமகே தெரிவித்தார்.

கொழும்பில் வியாழக்கிழமை (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு முழுமையாக குறைக்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிரிவினைவாத எண்ணக்கரு பகிரங்கமாக வெளிப்படுகின்ற நிலையில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தலின்போதும் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது. இவ்விடயம் குறித்து கேள்வியெழுப்பியபோது முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு எவ்விதத்திலும் குறைக்கப்படவில்லை என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்தது. 

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு தொடர்பில் அனைவரும் கவனம் செலுத்தியுள்ள பின்னணியில் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு தரப்பில் இருந்து 116 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நீக்கப்பட்டுள்ளமை முறையற்றதொரு செயற்பாடாகும்.

சபாநாயகர் அசோக்க ரன்வலவின் இல்லாத கலாநிதி பட்டம் தற்போதைய பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. கலாநிதி பட்டம் தொடர்பில் பல்வேறு தரப்பினர் கேள்வியெழுப்பியுள்ள பின்னணியில் சபாநாயகர் அமைதியாக உள்ளார். கலாநிதி பட்டம் இருக்குமாயின் அதனை பகிரங்கப்படுத்தலாமே.

சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதாக ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கினார். பாரம்பரியமான அரசியல்வாதிகள் மோசடியாளர்கள். ஆகவே பாராளுமன்றத்தை சிரமதானம் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார். மக்களும் பெரும்பான்மை பலத்தை வழங்கினார்கள். ஆனால் இந்த அரசாங்கம் பெரும்பான்மை பலத்தை முறையற்ற வகையில் பயன்படுத்துகிறது.

சபாநாயகர் அசோக்க ரன்வலவின் கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சையில் ஜனாதிபதி அமைதி காப்பது ஏன்? சபாநாயகர் பதவி விலக வேண்டும் அல்லது கலாநிதி பட்டத்தை பகிரங்கப்படுத்த வேண்டும். 

மின்சார சபை தொழிற்சங்க தலைவராக பதவி வகித்த அசோக்க ரன்வலவின் கல்வித் தகைமையை மக்கள் கோரவில்லை. நாட்டின் 3ஆவது பிரஜையான சபாநாயகரின் கல்வித் தகைமையே தற்போது சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. 

ஆகவே, சபாநாயகர் பதவிக்கான கௌரவம் மலினப்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கம் உண்மைத் தன்மையுடன் செயற்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *