ஆசிய அபிவிருத்தி வங்கியின் பங்களிப்பைப் பெற தீர்மானம் - சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ - News View

About Us

About Us

Breaking

Thursday, December 12, 2024

ஆசிய அபிவிருத்தி வங்கியின் பங்களிப்பைப் பெற தீர்மானம் - சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

(செ.சுபதர்ஷனி)

நாட்டின் சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்கு தொடர்ச்சியாக எதிர்வரும் காலங்களிலும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பங்களிப்பைப் பெற உள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

சுகாதார அமைச்சில் சுகாதாரத் துறையின் மேம்பாட்டுக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள மற்றும் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில், புதன்கிழமை (11) சுகாதார அமைச்சர் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கை பிரதிநிதி Dai-Ling Chen டாய் லெங் சென் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற உத்தியோகபூர்வ கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

உள்ளநாட்டு சுகாதார கட்டமைப்பை மேம்படுத்தும் வேலைத்திட்டம், மேலதிக நிதி உதவி, உணவு மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான செயற்திட்டங்கள் தொடர்பிலும் சுகாதார பிரிவில் உள்ள அனைத்து நிறுவனங்களையும் ஒன்றிணைத்து டிஜிட்டல் மயமாக்கலுக்கு உட்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் மேற்படி கலந்துரையாடலில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அத்தோடு அங்கீகரிக்கப்பட்ட முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை சிகிச்சைகள், வயோதிபர்களுக்கு வழங்கப்படும் சுகாதார வசதிகள், தொற்றா நோய் நிலைமைகளை கட்டுப்படுத்தல் மற்றும் சிகிச்சைகளை பலப்படுத்தல், மனித வளம் உள்ளிட்ட ஏனைய வளங்களின் முகாமைத்துவம், செயற்றிறன் மிக்க சேவையை வழங்குவதன் ஊடாக எதிர்கால இலக்கை அடைவது தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது சுகாதார அமைச்சர் கருத்து தெரிவிக்கையில், 1966 ஆம் ஆண்டு முதல் இதுவரை ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கைக்கிடையில் நீண்ட காலமாக நல்ல நட்புறவு நிலவி வருகிறது.

புதிய அரசாங்கம் உள்ளாட்டு ஆரம்ப சுகாதார சேவையை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளது. இவ் வேலைத்திட்டத்துக்கு எதிர்வரும் நாட்களில் ஆசிய அபிவிருத்தியும் வங்கி ஒத்துழைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

நாட்டின் சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்கு தொடர்ச்சியாக எதிர்வரும் காலங்களிலும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பங்களிப்பைப்பெற எதிர்பார்த்துள்ளோம்.

ஆரம்ப சுகாதார சேவையை பலப்படுத்துவதன் மூலம் நாட்டு மக்களிடையே வெகுவாக பரவக் கூடிய தொற்று நோய் மற்றும் தொற்றா நோய்களை கட்டுப்படுத்தி உரிய இலக்கை அடையலாம் என்றார்.

இதேவேளை, பல வருடங்களாக ஆசிய அபிவிருத்தி வங்கி சுகாதாரம், கல்வி, பொருளாதார அபிவிருத்தி தொடர்பான மக்கள் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கு நிலையான பங்களிப்பை வழங்கியுள்ளது.

இந்நாட்டின் சுகாதார சேவையின் மேம்பாட்டில் தடையாக உள்ள காரணிகளை நீக்குவதற்கும், எதிர்கால திட்டங்களுக்கும், புதிய அரசாங்கம் மற்றும் ஏனைய பங்காளர்களுடனும் இணைந்து எமது பங்களிப்பை வழங்க தயாராக உள்ளோம் என ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கை பிரதிநிதி உறுதியளித்தார்.

No comments:

Post a Comment