கடந்த அரசாங்கங்களைப் போன்று பழைய பாதையிலேயே பயணிக்காமல் பொறுப்புக் கூறலை நிறைவேற்றுங்கள் - எரான் விக்கிரமரத்ன - News View

About Us

About Us

Breaking

Thursday, October 17, 2024

கடந்த அரசாங்கங்களைப் போன்று பழைய பாதையிலேயே பயணிக்காமல் பொறுப்புக் கூறலை நிறைவேற்றுங்கள் - எரான் விக்கிரமரத்ன

(எம்.மனோசித்ரா)

யுத்தத்தின் பின்னர் இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. எனவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை பொருட்படுத்தாமல் கடந்த அரசாங்கங்களைப் போன்று பழைய பாதையிலேயே பயணிக்காமல், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பொறுப்புக் கூறலை நிறைவேற்ற வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் கூட்டணி தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வெளிநாட்டு கொள்கை தொடர்பில் வினவும்போது, தற்போது தற்காலிக அரசாங்கமே காணப்படுவதாகவும் எனவே தமது வெளிநாட்டு கொள்கை தொடர்பில் ஸ்திரமாகக் கூற முடியாது என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிடுகின்றார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள யோசனை காலத்துக்கு காலம் மீள் திருத்தம் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அண்மையில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. 20 நாடுகள் அதற்கு ஆதரவாகவும், 7 நாடுகள் எதிராகவும் தமது வாக்குகளைப் பயன்படுத்தின.

எவ்வாறிருப்பினும் யுத்தத்தின் பின்னர் இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதன் குறிக்கோள்களில் பிரதானமானது நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதாகும்.

அது மாத்திரமின்றி வடக்கு, கிழக்கு மாத்திரமின்றி நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பெருமளவான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

மனித உரிமைகள் எனும்போது அங்கு எவ்வித பேதங்களுக்கும் இடமளிக்கப்படமாட்டாது. அதேவேளை காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலும் ஆராய வேண்டியுள்ளது.

யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் இராணுமயமாக்கல் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனைக் குறைக்க வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்தியிருக்கிறது.

மேலும் சுயாதீன நீதிமன்றம் காணப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்மையில் கடந்த இரு ஆண்டுகளில் நீதித்துறை முழுமையாக சுயாதீனமாகவே செயற்பட்டுள்ளது. அதற்கமைய வரலாற்று முக்கியத்துவம் மிக்க தீர்ப்புக்களும் வழங்கப்பட்டுள்ளன. முஸ்லிம் மக்கள் ஓரங்கட்டப்படும் நிலைமை மாற்றப்பட வேண்டும் என்று ஐ.நா. தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே கடந்த அரசாங்கங்களைப் போன்று பழைய பாதையிலேயே பயணிக்காமல் புதிய பாதையில் பயணித்து பொறுப்புக் கூறலை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி அநுர தலைமையிலான அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

இந்த அரசாங்கம் ஐ.நா. கூட்டத்தைப் புறக்கணித்தது மாத்திரமின்றி, பிரிக்ஸ் மாநாட்டையும் புறக்கணித்துள்ளது. பிரேஸில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டிணைவாகும்.

உலகம் தற்போது மாற்றமடைந்து வருகிறது. நாமும் எமது வெளிநாட்டு கொள்கை என்ன என்பதை அறிந்து அந்த இடத்துக்குச் செல்ல வேண்டும்.

உலகில் மொத்த சனத் தொகையில் 40 சதவீதமான மக்கள் இந்த நாடுகளிலேயே வாழ்கின்றனர். அது மாத்திரமின்றி உலகின் மொத்த தேசிய உற்பத்தியில் 30 சதவீதத்தை இந்த நாடுகளே கொண்டுள்ளன. எனவே இவற்றுடன் இணைந்து நாமும் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைவதற்கு முயற்சிக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment