வெளியிலிருந்து விமர்சிப்பதை விட கதிரையில் அமரும் போதுதான் அதிலுள்ள அபாயத்தை உணர முடியும் - துமிந்த திஸாநாயக்க - News View

About Us

About Us

Breaking

Thursday, October 17, 2024

வெளியிலிருந்து விமர்சிப்பதை விட கதிரையில் அமரும் போதுதான் அதிலுள்ள அபாயத்தை உணர முடியும் - துமிந்த திஸாநாயக்க

(எம்.மனோசித்ரா)

மத்திய வங்கி ஆளுனர் மற்றும் திறைசேரி செயலாளர் உள்ளிட்டோரை தாம் ஆட்சியமைத்து 24 மணித்தியாலங்களில் பதவி விலக்குவதாகக் கூறிய தேசிய மக்கள் சக்தி, இன்று அந்த இருவரும் இன்றி தம்மால் செயற்பட முடியாது என்ற நிலைமையிலுள்ளனர். வெளியிலிருந்து விமர்சிப்பதை விட கதிரையில் அமரும் போதுதான் அதிலுள்ள அபாயத்தை உணர முடியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

பொலன்னறுவையில் நேற்று புதன்கிழமை (16) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஜனாதிபதித் தேர்தலைப் போன்று பொதுத் தேர்தலிலும் சகல கட்சிகளும் இணைந்து போட்டியிடுகின்றோம். சிறந்த வேட்பாளர் குழுவொன்றை களமிறக்கியுள்ளோம்.

சில கட்சிகள் சிறந்த வேட்பாளர்களை தாம் களமிறக்கியுள்ளதாகக் கூறுகின்ற போதிலும், அவர்கள் யாரென மக்களுக்கு தெரியாது.

கடந்த 75 ஆண்டுகளில் யார் என்ன செய்திருக்கின்றார்கள் என தற்போதைய அரசாங்கம் கேள்வியெழுப்பினாலும், அன்றிருந்ததை விட இன்று நாடு அபிவிருத்தியடைந்துள்ளது என்பதை எவராலும் மறுக்க முடியாது.

கொள்கைகளுக்கு அப்பால் சென்று மக்களுடன் இணைந்து செயற்பட்டதன் காரணமாகவே நாட்டை அபிவிருத்தி செய்ய முடிந்தது. தற்போது மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ள நாமே நாட்டை அபிவிருத்தியடைச் செய்தோம் என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கின்றோம்.

தற்போது தேசிய மக்கள் சக்தி அலையின் பின்னால் செல்பவர்களுக்கும் கூட இது தெரியும். ஆனால் இவர்கள் தேர்தலுக்கு முன்னர் வழங்கிய எந்தவொரு வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.

இவர்களால் எதையும் செய்ய முடியாது என்பதை நாம் தேர்தலுக்கு முன்னரே கூறினோம். அவர் கூறிய சில விடயங்களை செய்ய முடியாது என்பதையும் நாம் அறிந்திருந்தோம். எனினும் அதனை அறியாத மக்கள் அநுரவுக்கு வாக்களித்தனர். ஊழல், மோசடிகள் தொடர்பில் கூறிய எதையும் அவர்கள் செய்யவில்லை.

மத்திய வங்கி ஆளுனர் மற்றும் திறைசேரி செயலாளர் உள்ளிட்டோரை 24 மணித்தியாலங்களில் பதவி விலக்குவதாகக் கூறினார்கள். ஆனால் இன்று அந்த இருவரும் இன்றி தம்மால் செயற்பட முடியாது என்ற நிலைமையிலுள்ளனர். வெளியிலிருந்து விமர்சிப்பதை விட அந்த கதிரையில் அமரும் போது தான் அதிலுள்ள அபாயத்தை உணர முடியும் என்றார்.

No comments:

Post a Comment