(எம்.ஆர்.எம்.வசீம்)
அமெரிக்க ஜனாதிபதியின் வரி அதிகரிப்பில் இருந்து நிவாரணம் பெற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை இருப்பதாக தெரியவில்லை. ரணில் விக்ரமசிங்க பதவியில் இருந்திருந்தால் ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் நேரடியாக கலந்துரையாடி இதற்கு தீர்வு கண்டிருப்பார் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதியின் வரி அதிகரிப்பில் இலங்கைக்கு நிவாரணம் கிடைக்கும் என அரசாங்கம் தெரிவித்து வரும் கருத்து தாெடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அமெரிக்க ஜனாதிபதி விதித்துள்ள வரி அதிகரிப்பில் இருந்து நிவாரணம் பெற்றுக்கொள்ள உலக நாட்டு தலைவர்கள் ஜனாதிபதி ட்ரம்புடன் கலந்தரையாடி சலுகைகளை பெற்று வருகின்றனர். இந்திய பிரதமர் மோடி ட்ரம்புடன் நேரடியாக கலந்துரையாடி வரி நிவாரணம் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேபோன்று வியட்நாமுக்கு விதிக்கப்பட்டிருந்த 46 வீத வரியை நூற்றுக்கு 20 வீதம் வரை குறைத்துக் கொண்டுள்ளதாக தெரியவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று இன்னும் 20 நாடுகளின் வரி அதிகரிப்பை குறைப்பதற்கு ஜனாதிபதி ட்ரம் அந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக தகவல் வருகிறது. ஆனால் இந்த நிவாரணம் இலங்கைக்கு இருக்கிறதா என்று எங்களுக்கு இதுவரை தெரியாது. அரசாங்கம் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறது.
அரசாங்கத்தின் அமைச்சர்கள் கடந்த காலங்களில் தெரிவித்து வந்த பொய்களின் அடிப்படையில் இந்த வரி நிவாரணம் தொடர்பில் தெரிவிக்கும் விடயங்களை எங்களுக்கு நம்ப முடியாமல் இருக்கிறது. என்றாலும் எங்களுக்கு கிடைக்கின்ற தகவல்களின் பிரகாரம் ஜனாதிபதி ட்ரம்பின் வரி நிவாரண பட்டியலில் இலங்கை இல்லை. அதனால் அரசாங்கம் இதற்கு என்ன செய்யப்போகிறது?.
எமது ஆடைகளே அதிகம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. எமக்கு வரி நிவாரணம் கிடைக்காதுவிட்டால், எமது ஆடைத் தொழிற்சாலைகள் வீழ்ச்சியடையும். அங்கு தொழில் புரிபவர்களின் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் ஆபத்து இருக்கிறது.
அதனால் அரசாங்கம் இது தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசாங்கத்தின் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் அமெரிக்க வர்த்தக ஆணையாளரை சந்தித்து கலந்துரையாடி இருக்கின்றனர். அவரை சந்தித்து இதற்கு தீிர்வுகாண முடியும் என நாங்கள் நினைக்கவில்லை.
இதற்கு முன்னர் இதுபாேன்ற பிரச்சினை ஏற்பட்டபோது, அமெரிக்காவின் உப ஜனாதிபதி இந்தியாவுக்கு வந்திருந்தபோது, ரணில் விக்ரமசிங்க பிரதமர் மோடியுடன் கலந்துரையாடி இந்தியாவுக்கு சென்று, அவரை சந்தித்து, ஏற்பட்ட பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொண்டார். அந்தளவு அனுபவம் ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு இல்லை என்பது எமக்கு தெரியும்.
என்றாலும் தற்போது ரணில் விக்ரமசிங்க பதவியில் இருந்திருந்தால்., எந்த வழியிலாவது ஜனாதிபதி ட்ரம்பை சந்தித்து, கலந்துரையாடி இந்த வரி நிவாரணத்துக்கு தீர்வை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுத்திருப்பார் என்றார்.
No comments:
Post a Comment