கொழும்பில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு கிடைத்த தகவலின்படி, இலங்கை கடற்படையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் மூலம், இலங்கையின் மேற்கு கடற்கரையில் உள்ள கடற்பரப்பில் ஆபத்தில் இருந்த இந்திய மீன்பிடி படகிலிருந்து 04 மீனவர்களை கடற்படையினர் நேற்று (06) பாதுகாப்பாக மீட்டனர்.
2025 ஜூன் 29 ஆம் திகதி சீரற்ற வானிலை காரணமாக இந்திய மீன்பிடிக் கப்பல் காணாமல் போனதாக மும்பை கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திலிருந்து கொழும்பில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை கடற்படை உடனடியாக அனைத்து தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டது.
அதன்படி, மேற்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட விரைவுத் தாக்குதல் கப்பல்களால் நடத்தப்பட்ட சிறப்புத் தேடுதல் நடவடிக்கையில், சிலாபத்திற்கு அப்பால் மேற்குக் கடலில் பாதிக்கப்பட்டு செயல்படாமல் இருந்த இந்திய மீன்பிடிக் கப்பல் அவதானிக்கப்பட்டதுடன், மேலும் அதில் இருந்த 4 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
இந்த தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் போது மீட்கப்பட்ட 4 இந்திய மீனவர்களும் இந்தியாவின் மினிகோய் தீவில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். மேலும் அவர்கள் திக்கோவிட்ட துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டதுடன் கடற்படை மற்றும் கடலோர காவல்படையினரால் கூடுதல் உதவி வழங்கப்பட்டு ஆரம்ப வைத்திய பரிசோதனைகளின் பிறகு, 4 இந்திய மீனவர்களும் மேலதிக நடவடிக்கைகளுக்காக வத்தளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
அதன்படி, இந்த வெற்றிகரமான தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் மூலம், இந்த இரு வாரங்களில் கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துடன் இணைந்து கடற்படையால் பாதுகாப்பாக மீட்கப்பட்ட இரண்டாவது இந்திய மீனவர் குழு இதுவாகும்.
மேலும், இந்த வெற்றிகரமான மீட்பு நடவடிக்கையானது, கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் மற்றும் கடற்படையின் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கான செயல்பாட்டுத் தயார்நிலை மற்றும் வெற்றிகரமாகவும் உடனடியாகவும் பதிலளிக்கும் திறனுக்கான மற்றொரு சான்றாகும்.
மேலும், இலங்கை தேடல் மற்றும் மீட்பு மண்டலத்திற்குள் துன்பத்தில் உள்ள கடல்சார் மற்றும் மீனவ சமூகத்திற்கு தேவையான நிவாரணங்களை வழங்க கடற்படை எப்போதும் தயாராக உள்ளது.
No comments:
Post a Comment