நாமல் ராஜபக்ஷ செய்த தவறால் எமது வீடுகள் தீக்கிரையாகின : கூறுகிறார் மொட்டு எம்பி - News View

About Us

About Us

Breaking

Sunday, August 4, 2024

நாமல் ராஜபக்ஷ செய்த தவறால் எமது வீடுகள் தீக்கிரையாகின : கூறுகிறார் மொட்டு எம்பி

(இராஜதுரை ஹஷான்)

நாமல் ராஜபக்ஷ உட்பட ஒரு தரப்பினர் 2022 ஆம் ஆண்டு மே மாதம் 09ஆம் திகதி செய்த தவறால் எமது வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. இவர்கள் தவறு செய்ய நாங்கள் தண்டனை அனுபவித்தோம். இவ்வாறானவர்களுடன் அரசியல் செய்வதை விட தற்போது எடுத்துள்ள தீர்மானம் சிறந்ததாக உள்ளது என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.

அநுராதபுரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (04) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, அனுராதபுரம் மாவட்ட மக்களின் அபிலாஷைக்கு அமைவாகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்தேன். நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவிட்டது. தற்போதைய முன்னேற்றத்தை தொடர வேண்டுமாயின் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் மீண்டும் தோற்றம் பெற வேண்டும் என்று சாதாரண மக்கள் குறிப்பிடுகிறார்கள்.

மீண்டும் பரீட்சித்துப் பார்க்கும் நிலையில் நாடு இல்லை. நாட்டு மக்கள் தெளிவாக உள்ளார்கள். 2022ஆம் ஆண்டு பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின்போது மாறுபட்ட அரசியல் கொள்கையுடைய ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்குவதற்கு கட்சி எடுத்த தீர்மானத்துக்கு நாங்கள் நிபந்தனையற்ற வகையில் ஆதரவு வழங்கினோம்.

நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தை ஏற்கப்போவதில்லை. எமது மாவட்ட மக்களின் தீர்மானத்துக்கு அமையவே ஜனாதிபதியுடன் ஒன்றிணைந்துள்ளேன். எனது தீர்மானத்தில் மாற்றமில்லை. கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்களின் நிலைப்பாட்டுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.

பொதுஜன பெரமுனவின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கியவர்கள் தொடர்பில் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அரகலயவின்போது அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டமை சிறந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளமை முறையற்றது.

நாமல் ராஜபக்ஷ உட்பட தரப்பினர் 2022.05.09ஆம் திகதி செய்த தவறினால்தான் எமது வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. இவர்கள்தான் போராட்டக்களத்துக்கு தாக்குதல் நடத்தும் வகையில் அரசியல் கூட்டங்களை நடத்தினார்கள். இதன் பின்னர்தான் அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரளவும் படுகொலை செய்யப்பட்டார். இவர்கள் இழைத்த குற்றத்துக்கு நாங்கள் தண்டனை அனுபவித்தோம் என்றார்.

No comments:

Post a Comment