(இராஜதுரை ஹஷான்)
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக செயற்படும் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அவர்களை கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொதுஜன பெரமுனவின் உறுப்பினரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கவும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு வழங்காமலிருக்கவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுஜன பெரமுனவின் 92 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.
அத்துடன் பொதுஜன பெரமுனவின் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் உறுப்பினர்களும் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதாக குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறான பின்னணியில் கட்சியின் கொள்கை மற்றும் தீர்மானங்களுக்கு எதிராக செயற்படுபவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொண்டு, கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக குறிப்பிட்டு பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதாக குறிப்பிட்டுள்ள ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா களுத்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை 2022ஆம் ஆண்டு நெருக்கடியின்போது ஜனாதிபதியாக்குவதாக எடுத்த தீர்மானம் சிறந்ததாயின், நிலைமை சீரானதன் பின்னர் அவரை ஜனாதிபதியாக்க வேண்டும் என்று நாங்கள் குறிப்பிடுவது எவ்வாறு தவறாகும்? கட்சியின் தீர்மானத்தை ஏற்க முடியாது. என்னை தெரிவு செய்த மக்களின் அபிலாஷைக்கு அமையவே ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க தீர்மானித்தேன் என்றார்.
No comments:
Post a Comment