திருகோணமலை, குச்சவெளி, இலந்தைக்குளம் பகுதியில் முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான வயல் காணிகளை அப்பகுதியிலுள்ள விகாரையின் விகாராதிபதி துப்பரவு செய்வதால் அப்பகுதியில் பதற்ற நிலை எழுந்துள்ளது. இச்சம்பவமானது 25.07.2024 அன்று இடம்பெற்றுள்ளது.
குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலந்தைக்குளம் 5ஆம் கட்டைப் பகுதியிலுள்ள பிச்சமல் புரான ரஜமகா விகாரையின் விகாராதிபதி குச்சவெளியான் குளத்துக்கு அருகே, முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான விவசாய நிலங்களை ஜே.சி.பி இயந்திரம் மூலம் துப்புரவு செய்ய முயற்சித்தபோது அங்கு பதற்ற நிலை தோன்றியது.
அப்பகுதிக்கு வருகை தந்த காணி உரிமையாளர்கள் தமது காணிகளை பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினர் ஆக்கிரமிப்பதாக குற்றம் சாட்டியதையடுத்து அங்கு பதற்றமான நிலை தோற்றம் பெற்றது.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன், ஜனாதிபதி செயலகத்துக்கும் அறிவித்துள்ளதாக குச்சவெளி விவசாய சம்மேளனத்தின் தலைவர் ஜே.எம்.ரகுமான் யூசுப் தெரிவித்தார்.
இந்த விடயம் குச்சவெளி பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து, குறித்த காணி துப்புரவு நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் ஜே.எம்.ரகுமான் யூசுப் தெரிவித்தார்.
இக்காணிகளின் வரலாறு தொடர்பில் ஜே.எம்.ரகுமான் யூசுப் மேலும் குறிப்பிடுகையில், “இலந்தைக்குளம் பகுதியில் காலாகாலமாக வாழ்ந்து வந்த முஸ்லிம் மக்கள் யுத்தத்தின் காரணமாக 1990ஆம் ஆண்டு மற்றும் அதனை அண்டிய காலப்பகுதிகளில் வெவ்வேறு பிரதேசங்களில் இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்தனர். இங்கு வாழ்ந்த மக்களுக்கு 1 ஏக்கர் குடியிருப்புக் காணியும் 2 ஏக்கர் வயல் நிலமும் சொந்தமாகவிருந்தது.
யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் இப்பகுதியில் மக்கள் குடியிருக்காவிட்டாலும் தமது வயல் நிலங்களில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் இப்பிரதேசத்திலுள்ள பௌத்த விகாரையில் உள்ள பிக்கு, ஹம்பாந்தோட்டை வீரகெட்டிய பகுதியைச் சேர்ந்தவர். இவர் வீரகெட்டிய பகுதியிலுள்ள சிங்களவர்களை இங்கு அழைத்து வந்து எமது காணிகளை சட்டவிரோதமாக அபகரித்து, துப்புரவு செய்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடவும் அங்கு பௌத்த விகாரை ஒன்றை அமைக்கவும் முயற்சித்து வருகிறார். இப்பகுதியில் சிங்கள மக்களைக் குடியேற்றுவதற்கான சதித்திட்டமாகவே இதனைப் பார்க்க வேண்டியுள்ளது.
இப்பகுதியில் மக்கள் வாழ்ந்ததற்கான பிறப்பு அத்தாட்சி பத்திரம், இறப்பு அத்தாட்சிப் பத்திரம், காணி ஆவணங்கள் உட்பட உடைந்த பாடசாலைக் கட்டடம், அரச கட்டடங்களும் இன்னும் ஆதாரங்களாக உள்ளன. 1968 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட கிணறு ஒன்றும் அதே இடத்தில் இன்னமும் உள்ளது. அப்போது கட்டப்பட்ட வயல் வரம்புளும் இன்னும் அழியாமல் காணப்படுகின்றது.
இப்பகுதியில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான சுமார் 300 ஏக்கர் காணி உள்ளது. அதில் 22 ஏக்கர் தொல்பொருள் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள நிலத்தையே இப்போது பௌத்த பிக்கு ஆக்கிரமிக்க முனைகிறார்.
முன்னாள் ஆளுநர் அநுராதா யஹம்பத் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு கடந்த காலங்களில் உடந்தையாகவிருந்தார். எனினும் வன இலாகா திணைக்களத்தின் எதிர்ப்பு காரணமாக அவரது காலப்பகுதியில் இக்காணி ஆக்கிரமிப்பு நடவடிக்கை வெற்றி பெறவில்லை. இந்நிலையில்தான் சில வருடங்கள் கழிந்து மீண்டும் இந்த ஆக்கிரமிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது” என்றார்.
Vidivelli
No comments:
Post a Comment