திருகோணமலை - உட்துறைமுக வீதியில் மாகாண சபையின் நிதியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடைபாதை விஸ்தரிப்புக்கு எதிராக மக்கள் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான திருகோணமலை - உட்துறைமுக வீதியில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையின் அளவை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக 600 மீற்றர் வரையான நடைபாதையின் அகலத்தை 6 அடி 3 அங்குலம் வரை அதிகரிப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வருகின்றன.
இதற்காக 1 கோடியே 50 இலட்சம் ரூபா மாகாண சபையின் நிதியில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
குறித்த வீதியானது சிங்கள மகா வித்தியாலயம் தொடக்கம் துறைமுக பொலிஸ் நிலையம் வரையான 1078 மீற்றர் தூரம் நீளமான நடைபாதையின் அளவை 6 அடி 3 அங்குலம் வரை வீதியின் உட்புறமாக அகலமாக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அதன் முதற்கட்டமாக 600 மீற்றர் வரையான தூரத்தை விஸ்தரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதனால் புதிதாக போடப்பட்ட குறித்த நடைபாதையானது முற்றாக உடைக்கப்பட்டு வருகின்றது. இதனால் அனைத்து மக்களும் இதற்கு தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
குறிப்பாக மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள வீதிக்கு மாகாண சபையின் பெருமளவான நிதி செலவிடப்படுவதாகவும், அண்ணளவாக 1 தொடக்கம் 2 அடி அகலமாக்குவதற்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள நடைபாதையினை முற்றாக உடைத்து வருவதாகவும் மக்கள் தமது அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர்.
அத்துடன் மாகாண சபையின் கீழ் உள்ள பெருமளவான வீதிகள் பயன்படுத்த முடியாமல் செப்பனிட வேண்டியும், புனரமைக்கப்பட வேண்டியும் உள்ள நிலையில் அவற்றை கருத்தில் கொள்ளாது பெருமளவான மக்களுடைய பணம் வீண் செலவு செய்யப்படுவதாக மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.
No comments:
Post a Comment