திருகோணமலை நகராட்சி மன்ற செயலாளரின் இடமாற்றம் தொடர்பாக திருகோணமலை மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த எழுத்தாணை மனு மீதான வழக்கு விசாரணை இன்று (23) மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லா முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
குறித்த மனுவை வெள்ளையன் இராஜசேகர் சார்பாக பதிவு செய்யப்பட்ட சிரேஷ்ட சட்டத்தரணி ஹனீப் லெப்பை தாக்கல் செய்திருந்தார்.
இதன்போது குறித்த இடமாற்றமானது சட்ட ரீதியற்ற முறையிலும் பழிவாங்கும் வகையில் இடம்பெற்றிருப்பதாகவும், இது நேர்மையாக பணியாற்றிவந்த அரச ஊழியருக்கு இழைக்கப்பட்ட அநீதி எனவும் குறித்த இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு கோரி மனுதாரர் சார்பாக தனது சமர்ப்பணங்களை முன்வைத்தார்.
இதன்போது இரு தரப்பு வாதங்களையும் கவனத்தில் எடுத்துக் கொண்ட நீதிபதி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 08ஆம் திகதி குறித்த வழக்கினை அழைக்க திகதியிட்டதுடன் எதிராளிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள உரிய தரப்பினரை குறித்த திகதியில் நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் அழைப்பாணை விடுத்திருந்தார்.
திருகோணமலை நகராட்சி மன்ற செயலாளராக பதவி வகித்த வெள்ளையன் இராஜசேகர் கிழக்கு மாகான ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு அமைய குச்சவெளி பிரதேச சபைக்கு இடமாற்றம் செய்யப்படுவதாக 24.06.2024 அன்றைய திகதியிடப்பட்டு கடிதம் வழங்கப்பட்டிருந்ததுடன் மறுதினமே விடுவிப்பு கடிதமும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment