25,000 பேரை ஆசிரியர் சேவையில் உள்ளீர்க்க அரசாங்கம் நடவடிக்கை : நீதிமன்றத்துக்கு அறிவித்த சட்டமா அதிபர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 23, 2024

25,000 பேரை ஆசிரியர் சேவையில் உள்ளீர்க்க அரசாங்கம் நடவடிக்கை : நீதிமன்றத்துக்கு அறிவித்த சட்டமா அதிபர்

அரசாங்க பாடசாலைகளில் தற்போது ஆசிரியர்களாக பணி புரியும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை நேர்முகப் பரீட்சைக்கு உட்படுத்தி, தகைமைகளை பூர்த்தி செய்யும் அனைவரையும் ஆசிரியர் சேவையில் உள்ளீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சட்டமா அதிபர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.

இது தொடர்பான அமைச்சரவைப்பத்திரம் கல்வி அமைச்சர் சுசில்பிரேம ஜயந்தவினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் சட்டமா அதிபர் சார்பில் நேற்று ஆஜராகியிருந்த மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

பல வருடங்களாக ஆசிரியர் சேவையில் ஈடுபட்டுள்ள தம்மை ஆசிரியர் சேவையில் உள்ளீர்க்காததால், தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டுமெனக் கோரி தற்போது ஆசிரிய சேவையில் ஈடுபட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஒரு தரப்பினர் இந்த அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிமன்றத்தில் நடைபெற்றபோதே, மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் இவ்வாறு தெரிவித்தார்.

மேற்படி மனு ஏ.எச்.எம்.டீ. நவாஸ் அச்சல வெங்கப்புலி மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

இரு தரப்பினராலும் இதற்கு முன்னர் மனு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டுக்கு இணங்க, அதனோடு சம்பந்தப்பட்ட இணக்கப்பாட்டு நிபந்தனையை மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் நேற்று உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

தற்போது ஆசிரியர் சேவையில் ஈடுபட்டுள்ள 25,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்களை விசேட நேர்முகப் பரீட்சைக்கு உட்படுத்தி தகைமைகளை பூர்த்தி செய்பவர்களை ஆசிரியர் சேவையில் உள்ளீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இதன்படி 40 வயது உச்ச வயதெல்லையின் கீழ் தேசிய பாடசாலைகளுக்கும் 45 வயது என்ற உச்ச வயதெல்லையின் கீழ் மாகாண பாடசாலைகளுக்கும் அவர்களை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் மேற்படி நியமனங்கள் தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பித்து அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்ட பின்னர், இந்த நியமனமனங்கள் வழங்கப்படும் என மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான விடயங்களை மனு ஒன்றின் மூலம் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment