(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் பெருந்தோட்ட நிறுவனங்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் 1700 ரூபாய் சம்பளத்தை வழங்க 9 நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன. நான் முகநூல் அறிக்கை வீரனல்ல, செயல் வீரன். முன்வைக்கப்படும் பொய்யான குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கிறேன் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) இடம்பெற்ற மது வரி கட்டளைச் சட்டம் மற்றும் ஏற்றுமதி,இறக்குமதி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தல்கள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, புதன்கிழமை (10)) பகல் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் பெருந்தோட்ட நிறுவனங்களுடன் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. செவ்வாய்க்கிழமை (09) நான் இந்த சபையில், ஆர்ப்பாட்டங்களின் பின்னர் 1700 ரூபா சம்பளம் வழங்க 7 நிறுவனங்கள் இணங்கியுள்ளதாகக் கூறியிருந்தேன். இன்று 9 நிறுவனங்கள் 1700 ரூபா சம்பளம் வழங்க தமது இணக்கத்தைத் தெரிவித்துள்ளார்கள் என்பதை இந்த சபையில் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றேன். வெகுவிரைவில் சிறந்த தீர்வு வரும் என நான் எதிர்பார்க்கின்றேன்.
நான் சபையில் இல்லாத நேரம் என் மீது சில குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என் மீது ''1700 ரூபாவுக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்த பின்னர் நான் பொகவந்தலாவ பெருந்தோட்ட நிறுவனத்தில் இருக்கும் துரைமார்கள் அனைவரையும் என் வீட்டுக்கு அழைத்து நான் பேசியதாக குற்றம் சாட்டியிருந்தார். இது முழுமையான பொய் .
பொகவந்தலாவ பெருந்தோட்ட நிறுவனத்தில் இருக்கும் துரைமார்களையும் கூப்பிட்டேன். ஹற்றன், தலவாக்கலை பெருந்தோட்ட நிறுவனத்தில் இருக்கும் துரைமார்களையும் நான் கூப்பிட்டேன். ஏன் கூப்பிட்டேன் என்றால் நாம்தான் மக்களுடன் வேலை செய்து கொண்டிருக்கின்றோம். நாம் முகநூலில் அறிக்கை விடுபவர்கள் அல்ல. நான் ஒளிவு மறைவாகப் பேசுபவன் அல்ல. நான் ஜீவன் தொண்டமான். நான் போய் துரைமாரை பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது. அவர்கள்தான் என்னை வந்து பார்க்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment