அதிபர்களின் சம்பள முரண்பாட்டுக்கு காரணம் ஆசிரியர் சேவையில் இருக்கும் பிரச்சினையே - கல்வி அமைச்சர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 10, 2024

அதிபர்களின் சம்பள முரண்பாட்டுக்கு காரணம் ஆசிரியர் சேவையில் இருக்கும் பிரச்சினையே - கல்வி அமைச்சர்

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு நீண்ட கால பிரச்சினை. அதனை ஓரிரு தினங்களில் சரி செய்ய முடியாது. அனைத்து தரப்பினரும் ஓரிடத்தில் அமர்ந்து, அனைத்து துறையினருக்கும் ஒரே தடவையில் தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறில்லாமல், இந்த பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், அதிபர்களின் ஒட்டு மொத்த பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்காக ஓய்வு பெற்ற பேராசிரியர் குணபால நாணயக்கார தலைமையிலான குழு அமைத்து, அதில் அனைவருக்கும் கருத்து தெரிவிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டு, அந்த குழு அறிக்கை ஒன்றை தயாரித்திருந்தது. என்றாலும் அதிபர்களின் சம்பள முரண்பாட்டுக்கு காரணமாக இருப்பது ஆசிரியர் சேவையில் இருக்கும் முரண்பாடாகும்.

ஆசிரியர் சேவையில் ஆசிரியர் ஒருவர் தரம் ஒன்றுக்கு வரும்போது, அதிபர் ஒருவர் ஆசிரியர் சேவையில் இருந்து தரம் 3 சேவையை ஆரம்பிக்கும்போது அவர்களுக்கு கிடைக்கும் சம்பளம் இதனையும் விட குறைவு. இந்த முரண்பாடு ஆரம்பத்தில் இருந்து வரும் பிரச்சினையாகும். அதனால் இந்த இரண்டுக்கும் தீர்வு காண்பதாக இருந்தால், அதிபர்களை பணியாளர் சேவைக்கு இணைத்துக் கொள்ள வேண்டும். அதன்போது அவர்களுக்கு அதில் கிடைக்கும் கொடுப்பனவுகள் மூலம் ஆசிரியர் சேவையை விட சம்பள அதிகரிப்பு கிடைக்கிறது.

அவ்வாறு இல்லாமல் அதிபர்களுக்கு சம்பளத்தை அதிகரித்தால், அதனைத் தொடர்ந்து ஆசிரியர் சேவை சங்கம் அதனை தங்களுக்கும் வழங்குமாறு கோருவார்கள். அவர்களுக்கு வழங்கும்போது, அதற்கு அடுத்தபடியாக இருக்கும் ஆசிரியர் கல்வி சேவை, ஆசிரியர் ஆலோசகர் சேவை என தொடர்ந்து இந்த முரண்பாடு சுற்றிக் கொண்டிருக்கும். அதனால் இந்த பிரச்சினை தொடர்பாக அனைத்து தரப்பினரும் ஓரிடத்தில் அமர்ந்து, அனைத்து துறையினருக்கும் ஒரே தடவையில் தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் இந்த பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது.

எனவே, அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு நீண்ட கால பிரச்சினை. அதனை ஓரிரு தினங்களில் சரி செய்ய முடியாது. அனைத்து தரங்களின் முரண்பாடுகளையும் ஒரே தடவையில் தீர்க்க வேண்டியிருக்கிறது. இது தொடர்பாக அமைச்சரவைக்கு பத்திரம் ஒன்றை சமர்ப்பித்திருந்தேன். அதற்கு, அதிபர்களுக்கு தொடர்பாடல் கொடுப்பனவு, போக்குவரத்து கொடுப்பனவு வழங்குவதற்கு திறைசேரியுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதற்கு அனுமதி கிடைத்திருக்கிறது.

அது தொடர்பில் எமது அமைச்சின் செயலாளரும் திறைசேரியும் கலந்துரையாடி தீர்வு காணவே இருக்கிறது. என்றாலும் இந்த நடவடிக்கை தற்போது இறுதிக் கட்டத்தில் இருக்கிறது. அதிபர்களுக்கு கொடுப்பனவு வழங்கும் பிரேரணையையும் நாங்கள் முன்வைத்திருக்கிறோம். அதனை இந்த குழுவின் ஊடாக வழங்குவதற்கு கவனம் செலுத்துவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்றார்.

No comments:

Post a Comment