(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு போதிய அதிகாரங்களை பெற்றுக் கொள்ளும் வகையில் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் அது வர்த்தமானியில் வெளியிடப்பட்டு அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) வாய் மூல விடைக்கான கேள்வி நேரத்தில் வசந்த யாப்பா பண்டார எம்.பி எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், முச்சக்கர வண்டிகள் மக்களுக்கு பெரும் சேவையை வழங்குகின்றன. எனினும், அந்த சேவையை ஒழுங்குபடுத்தல் அவசியமாகிறது. அது தொடர்பில் போதிய அதிகாரம் இல்லாமையினால் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளேன்.
தற்போதுள்ள நிலையை மாற்றுவதற்காக சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து அது மீள கிடைக்கப் பெற்றுள்ளது.
அந்த வகையில் தற்போது தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு பஸ் கட்டணங்கள் தொடர்பில் மட்டுமே தலையிட முடியும். பாடசாலை வேன்கள், முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட வாகனங்களுக்கும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஒழுங்குபடுத்தலை மேற்கொள்வதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது.
சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு சட்டமூலமாக்கி சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அதனை அனுப்பி மீள பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் விரைவில் அதனை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனை அடுத்து அது வர்த்தமானியில் வெளியிடப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
அதேவேளை, கண்டி மாவட்டத்தில் 91,615 பதிவு செய்யப்பட்ட முச்சக்கர வண்டிகள் சேவையில் உள்ளன. போக்குவரத்து சட்டத்தின் மூலம் விதிக்கப்பட்டுள்ள முறைமைக்கு இணங்க முச்சக்கர வண்டிகளில் மீற்றர் பொருத்தப்படுவது அவசியமாகும். அதன்படி, அறவிடப்படும் பணத்திற்கு அதில் பயணிப்போர் பற்றுச்சீட்டு கோருவார்களானால் பற்றுச்சீட்டு வழங்கப்பட வேண்டும். அது தற்போது முறையாக நடைமுறையில் இல்லை. சட்டம் திருத்தப்படும்போது இந்த அனைத்து விடயங்கள் அதில் உள்ளடக்கப்படும்.
அதேபோன்று, பயணிகள் முச்சக்கர வண்டியில் செல்லும்போது சாரதியின் புகைப்படம், முச்சக்கர வண்டியின் இலக்கம் உட்பட விபரங்கள் வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ளதைப் போன்று காட்சிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு உரிய அனுமதி கிடைத்ததும் ஓரிரு மாதங்களில் இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்றார்.
No comments:
Post a Comment