மைத்திரியின் கருத்துக்கள் அரசியல் நோக்கத்திற்காக எறியப்பட்ட பந்து : எம்மிலிருந்து ஒரு சிலர் விலகக்கூடும் என்கிறார் நளின் பண்டார - News View

About Us

About Us

Breaking

Thursday, March 28, 2024

மைத்திரியின் கருத்துக்கள் அரசியல் நோக்கத்திற்காக எறியப்பட்ட பந்து : எம்மிலிருந்து ஒரு சிலர் விலகக்கூடும் என்கிறார் நளின் பண்டார

(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள கருத்துக்கள், எவரேனுமொருவருடைய அரசியல் நோக்கத்திற்கான எறியப்பட்ட பந்து என்று சந்தேகிப்பதாகத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, இது தொடர்பான விசாரணைகள் மிகவும் நுணுக்கமான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் புதன்கிழமை (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், இறுதி மூச்சை பாதுகாத்துக் கொள்வதற்கான முயற்சியை அரசாங்கம் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பொதுஜன பெரமுனவினர் தமது வேட்பாளரொருவர் களமிறக்கப்படுவார் எனக்கூறிக் கொண்டிருந்தனர். ராஜபக்ஷக்களின் சகாக்கள் தவிர ஏனைய அனைத்து பொதுஜன பெரமுனவினரும் ரணில் விக்கிரமசிங்கவுடனேயே இருக்கின்றனர்.

பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணிலுடன் இருக்கின்ற போதிலும், வாக்காளர்கள் அவருடன் இல்லை. எனவே ராஜபக்ஷ குடும்பம் உள்ளிட்ட பொதுஜன பெரமுனவின் வேட்பாளராகவே ரணில் விக்கிரமசிங்க களமிறங்கவுள்ளார். எனவே எஞ்சியுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் சுமார் 3 இலட்சம் ஆதரவாளர்களையும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

யாரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதை மக்கள் தற்போது நன்கு அறிந்து கொண்டுள்ளனர். சஜித் பிரேமதாசவுடன் தற்போதுள்ள எவரும் ஊழல், மோசடிகள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு இலக்கானவர்கள் அல்ல. அதேபோன்று அவரது ஆட்சியில் எவரேனும் ஊழல், மோசடி குற்றச்சாட்டுக்களில் சிக்கினால் அவர்கள் உடனடியாக நீக்கப்படுவார்கள். இதனால் ஒரு சிலர் எம்மிலிருந்து விலகக்கூடும்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த விடயங்கள் தற்போது பிரபலமாகப் பேசப்படுகின்றன. அவரை பிரபலப்படுத்துவதை விடுத்து, அவர் கூறிய கருத்துக்களின் பின்னணியிலுள்ள விளையாட்டு என்ன என்பதை அறிய வேண்டும்.

இது எவரேனுமொருவருடைய அரசியல் தேவைக்காக எறியப்பட்ட பந்தாகவே நான் பார்க்கின்றேன். எனவே இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் பிரிவினர் ஆழமாக அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment