செனட் சபை முறைமை இரத்துச் செய்யப்பட்டமை இனப் பிரச்சினை ஏற்பட ஒரு காரணம் - விஜேதாச ராஜபக்ஷ் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 28, 2024

செனட் சபை முறைமை இரத்துச் செய்யப்பட்டமை இனப் பிரச்சினை ஏற்பட ஒரு காரணம் - விஜேதாச ராஜபக்ஷ்

(எம்.ஆர்.எம்.வசீம்)

1972ஆம் ஆண்டு அரசியலமைப்பின் மூலம் எமது நாட்டில் செனட் சபை முறைமை இரத்துச் செய்யப்பட்டது. செனட் சபை முறைமை இரத்துச் செய்யப்பட்டமை இனப் பிரச்சினை ஏற்படுவதற்கு ஒரு காரணமாக அமைந்தது. அதனால் செனட் சபை ஒன்றை மேற்கொள்வது தொடர்பில் கலந்துரையாட வேண்டும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.

புதிய தேர்தல் சட்ட திருத்தம் தொடர்பில் சமூக நீதிக்கான மக்கள் இயக்கம் நேற்றுமுன்தினம் மாலை கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டில் தற்போது இருந்துவரும் தேர்தல் முறை மாற்றப்பட வேண்டும். 994, 2015 தேர்தல்கள் மற்றும் மேலும் பல சந்தர்ப்பங்களில் இந்த தேர்தல் முறையை மாற்ற வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

புதிய தேர்தல் முறையில் தொகுதிவாரியாக 160 பாராளுமன்ற உறுப்பினர்களையும் விகிதாசார முறையின் கீழ் 65 பாராளுமன்ற உறுப்பினர்களையும் தெரிவு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.

மேலும் தேர்தல் செலவுகள் தொடர்பான ஒழுங்குபடுத்தல் சட்டம் தற்போது அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அதனை செயற்படுத்தும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு உரியது.

அதேநேரம் தேர்தல் முறைமையை மாற்றுவது தொடர்பில் கருத்து தெரிவிப்பது, தேர்தலை பிற்போடுவதற்காகும் என சிலர் தெரிவிக்கின்றனர். இந்த தேர்தல் முறைமை திருத்தம் மூலம் எந்த வகையிலும் தேர்தல் பிற்போடும் நடவடிக்கை இடம்பெறப்போவதில்லை. தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் அனைத்து கட்சி தலைவருகளுடன் கலந்துரையாடி தீர்மானிக்க வேண்டும்.

மேலும் எமது நாட்டுக்கு செனட் சபை ஒன்றை ஏற்படுத்துவது தொடர்பில் அமைச்சரவைக்கு பிரேரிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கா, இந்தியா, ஜேர்மன், ஜப்பான் போன்ற நாடுகளில் செனட் சபை இருக்கின்றன. அதனால் செனட் சபை போன்ற முறையொன்று தேவையாகும்.

1972 அரசியலமைப்பின் மூலம் எமது நாட்டில் செனட் சபை முறைமை இரத்துச் செய்யப்பட்டது. செனட் சபை முறைமை இரத்துச் செய்யப்பட்டமை இனப் பிரச்சினை ஏற்படுவதற்கு ஒரு காரணமாக அமைந்தது. செனட் சபை மூலம் இனங்களுக்கிடையில் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும்.

அதனால் செனட் சபை ஒன்றை ஏற்படுத்துவது தொடர்பில் கலந்துரையாட வேண்டும். 35 உறுப்பினர்களைக் கொண்ட செனட் சபை ஒன்று இந்த நாட்டுக்கு பொருத்தமாகும் என்றார்.

No comments:

Post a Comment