உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் தற்போதைய தேசிய பாதுகாப்பு தொடர்பில் முழுநாள் சபை ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்வரும் 21ஆம், 22ஆம் திகதிகளில் நடத்துவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அண்மையில் (08) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
பாராளுமன்றம் எதிர்வரும் 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை கூடவுள்ளதுடன், 19 மற்றும் 20ஆம் திகதிகளில் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.30 மணி வரை வாய் மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
செப்டெம்பர் 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை ஆட்களைப் பதிவு செய்தல் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி மற்றும் கொழும்பு துறைமுக நரகப் பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2334/47ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதி என்பன விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.
இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
செப்டெம்பர் 20ஆம் திகதி புதன்கிழமை மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை (451ஆம் அத்தியாயமான) காடு பேணற் கட்டளைச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2346/02ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதி விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
அன்றையதினம் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணிக்கு ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை குறித்த விவாதத்துக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
செப்டெம்பர் 21ஆம் திகதி வியாழக்கிழமை மற்றும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் தற்போதைய தேசிய பாதுகாப்பு தொடர்பில் எதிர்க்கட்சி பாராளுமன்றத்துக்குக் கொண்டுவரும் சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான முழுநாள் விவாதம் நடத்தப்படவுள்ளது.
No comments:
Post a Comment