(எம்.மனோசித்ரா)
எதிர்க்கட்சிகள் இணைந்து ஆட்சி அமைப்பதற்கு பொதுஜன ஐக்கிய முன்னணியாக நாம் எமது ஒத்துழைப்பினை வழங்குவோம். மக்கள் ஆணைக்கு நாம் தலை வணங்கி அவர்களின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றுவோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் திங்கட்கிழமை (19) இரவு நடைபெற்ற விசேட சந்திப்பொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், ஏனைய கட்சிகளுடனான பேச்சுவார்த்தைகள் தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக பொதுஜன பெரமுனவுடன் பிரத்தியேகமாக பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இது குறித்த பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்கின்றமை மகிழ்ச்சியளிக்கிறது.
எதிர்க்கட்சிகள் இணைந்து ஆட்சியமைப்பதற்கு பொதுஜன ஐக்கிய முன்னணியாக நாம் எமது ஒத்துழைப்பினை வழங்குவோம். மக்கள் ஆணைக்கு நாம் தலை வணங்குகின்றோம். அரசாங்கத்துக்கு வாக்களித்ததைப் போன்றே, எதிர்க்கட்சிகளுக்கும் மக்கள் வாக்களித்திருக்கின்றனர். எனவே மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு எமக்கிருக்கிறது.
மக்களின் நிலைப்பாட்டுக்கு எதிராக செயற்பட முடியாது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு மாத்திரம் சுமார் 1200 உறுப்பினர்கள் உள்ளனர். அதற்கமைய சுமார் 125 சபைகளில் எதிர்க்கட்சிகளால் ஆட்சியமைக்க முடியும். அன்று இந்த அரசாங்கம் சுயேட்சை குழுக்களை ஏளனப்படுத்தியமையை முழு நாடும் அறியும். அதே அரசாங்கம்தான் இன்று அவற்றின் கால்களில் விழுந்துள்ளன என்றார்.
No comments:
Post a Comment