வழக்கில் தீர்மானம் எட்டும் வரை மின் வெட்டு இல்லை : உயர் நீதிமன்றிற்கு உறுதியளித்த இலங்கை மின்சார சபை - News View

About Us

About Us

Breaking

Thursday, February 2, 2023

வழக்கில் தீர்மானம் எட்டும் வரை மின் வெட்டு இல்லை : உயர் நீதிமன்றிற்கு உறுதியளித்த இலங்கை மின்சார சபை

றிஸ்வான் சேகு முஹைதீன்

க.பொ.த. உயர்தரப் பரீட்சை காலத்தில் மின் வெட்டு அமுல்படுத்தப்படுகின்றமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட உரிமை மீறல் மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, தீர்மானத்தை நீதிமன்றம் அறிவிக்கும் வரை திட்டமிட்ட மின் வெட்டு அமுல்படுத்தப்படுவதைத் தவிர்ப்பதாக இலங்கை மின்சார சபை உயர் நீதிமன்றில் உறுதியளித்துள்ளது.

குறித்த மனு உயர் நீதிமன்ற நீதியரசர்களான பி.பத்மன் சூரசேன, யசந்த கோதாகொட, ஷிரான் குணரத்ன ஆகியோர் முன்னிலையில் இன்று (2) எடுத்துக் கொள்ளப்பட்டபோது, இலங்கை மின்சார சபை சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி உதித எகலஹேவா நீதிமன்றில் இதனை உறுதியளித்துள்ளார்.

அத்துடன், குறித்த காலப்பகுதியில் மின் வெட்டு ஏற்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மனு விண்ணப்பம் நாளை (03) முற்பகல் 11.30 மணிக்கு மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடியும் வரை தடையில்லா மின்சார விநியோகத்தை வழங்குமாறு இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்பட்ட உத்தரவை பின்பற்றத் தவறியமைக்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால், கடந்த ஜனவரி 31ஆம் திகதி, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளர், இலங்கை மின்சார சபையின் தலைவர், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகியோருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.

2023 ஜனவரி 23 முதல் பெப்ரவரி 17 வரையிலான உயர்தரப் பரீட்சைகள் இடம்பெறும் காலப்பகுதியில் தொடர்ச்சியான மின்சார விநியோகிப்பது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்வைத்த உடன்படிக்கைக்கு இணங்கத் தவறியதாக மனித உரிமைகள் ஆணைக்குழு குறித்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.

பரீட்சை காலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க தவறியதன் மூலம் இலங்கை மின்சார சபையின் அலட்சியம், மாணவர்களின் கல்விக்கான உரிமையை முழுமையாக மீறுவதாகக் கருதுவதாக ஆணைக்குழு குறித்த மனுவில் தெரிவித்துள்ளது.

இது மின்சார சபை அரச அதிகாரிகளின் வேண்டுமென்ற இழைக்கப்பட்ட அவமதிப்பு எனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த மனு மூலமான தலையீட்டின் ஒரே நோக்கம் நாட்டு மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதும் குறிப்பாக உயர் தரப் பரீட்சார்த்திகளின் உரிமை உரிய முறையில் பேணப்படுவதை உறுதிப்படுத்துவது மட்டுமே என்ற நிலைப்பாட்டை ஆணைக்குழு வலியுறுத்துவதாக குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment