றிஸ்வான் சேகு முஹைதீன்
2023 ஆம் வருடத்திற்கான மதிப்பிடப்பட்ட மொத்த அரசாங்க வருமானத்தை ஈட்டுவதில் ஏற்பட்டுள்ள கடுமையான சிரமங்களினால் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளை குறைக்கும் வகையில், அரசாங்க செலவினங்களை மிகவும் சிக்கனமாக மேற்கொள்ளுதல் மற்றும் தேவையற்ற செலவினங்களை முடிந்தவரை குறைக்கும் நோக்கில் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
2023 வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட அனைத்து மீண்டுவரும் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 6% இற்கு சமமான நிதியை குறைப்பது தொடர்பில், அனைத்து பிரதான கணக்கு அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்குமாறு, சம்பளம், வைத்தியச வசதிகள் உள்ளிட்ட குறிப்பிட்ட சில விடயங்களை உள்ளடக்கி குறித்த சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
அனைத்து அமைச்சினதும் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், அரச கூட்டுத்தாபனங்களின் தலைவர்கள், நியதிச்சட்ட நிறுவனங்கள், அரசாங்கத்திற்கு உரித்தான நிறுவனங்களின் தவைலர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள குறித்த தொடர்பான சுற்றறிக்கையை திறைசேரியின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளது.
செலவினங்களைக் குறைப்பதற்கான அடையாளம் காணப்பட்ட முறைகள் அடங்கிய திருத்தப்பட்ட செலவு மதிப்பீடுகள் பெப்ரவரி 28 ஆம் திகதிக்கு முன்னர் தேசிய வரவு செலவுத் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்குமாறு மேற்படி சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மையில் ஜனாதிபதியினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய குறித்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment