உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் சூழ்ச்சிகளை மேற்கொண்டமை அதற்கான அனுசாரணை வழங்கியமை ஆகியவை உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள நௌபர் மௌலவி உள்ளிட்ட பிரதிவாதிகள் 25 பேருக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் விசாரணையை இம்மாதம் 28 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு கொழும்பு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் தீர்மானித்துள்ளது.
மேற்படி வழக்கு விசாரணை நேற்றையதினம் நீதிபதிகளான தமித் தொட்டவத்த, அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகிய மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே வழக்கு விசாரணைகளை இம்மாதம் 28 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்போது விசாரணைக்குத் தேவையான ஆவணங்கள் அவசியமானால் அதனை சட்டமா அதிபரிடமிருந்து பெற்றுக் கொள்ளுமாறு நீதிபதிகள் குழாம் பிரதிவாதிகளின் சட்டத்தரணிகளுக்கு நேற்று அறிவுறுத்தல் வழங்கியது.
இக்குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் 23,270 குற்றங்களின் கீழ் நௌபர் மௌலவி, சஜிட் மௌலவி, மொஹம்மட் மில்ஹான், சாதிக் அப்துல்லா, ஆதம் லெப்பே, அலியஸ் நௌபர், முஹம்மட் சம்சுதீன் உள்ளிட்ட 25 பேருக்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்குத் தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment