பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரும், சிரேஷ்ட பேராசிரியருமான அத்துல சேனாரத்ன மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை தாக்கி உத்தியோகபூர்வ இல்லத்துக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 14 மாணவர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
ஒவ்வொரு மாணவரும் தலா 15,000 ரூபா மற்றும் 05 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில், இவர்களை விடுவிக்க மஜிஸ்திரேட் ஸ்ரீநித் விஜேசேக்கர உத்தரவிட்டார்.
பிணையில் விடுவிக்கப்பட்ட பேராதனை பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் சாமோத் சத்சர, மாதத்தில் முதலாம் மற்றும் மூன்றாம் வார ஞாயிற்றுக்கிழமைகளில் 09:00 மற்றும் 12:00 க்கு இடையில் கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட குற்றவியல் (03) பிரிவில் ஆஜராக வேண்டும் எனவும் மஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
ரொக்கப் பிணையிலும், சரீரப் பிணையிலும் விடுவிக்கப்பட்ட மாணவர்களுக்கு மேலும் பல நிபந்தனைகளை விதித்த மஜிஸ்திரேட், மீறினால் பிணை இரத்து செய்யப்படும் என்று அறிவித்தார்.
மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் அனுராதா விதானகே உள்ளிட்ட 13 மாணவர்களையும் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணிக்கும் 12.00 மணிக்கும் இடைப்பட்ட காலத்தில் கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட குற்றப்பிரிவு (03) பிரிவில் ஆஜராகுமாறு மஜிஸ்திரேட் அறிவித்துள்ளார். சந்தேக நபர்கள் வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் சாட்சியங்களை வழங்கிய முறைப்பாட்டின் சாட்சிகள் மற்றும் எதிர்காலத்தில் சாட்சியமளிக்கவுள்ள மாணவர்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த வகையிலும் இடையூறுகளை ஏற்படுத்தக்கூடாதெனவும் சந்தேகத்திற்குரிய மாணவர்களுக்கு மாஜிஸ்திரேட் அறிவித்துள்ளார்.
இந்த வழக்கு மார்ச் (15) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
(எம்.ஏ.அமீனுல்லா)
No comments:
Post a Comment