றிஸ்வான் சேகு முகைதீன்
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் தொடர்பான குழுவின் (கோப்) முன்னாள் தலைவர் பேராசிரியர் சரித்த ஹேரத்தை, புதிய கோப் குழுவில் உறுப்பினராக நியமிக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ முன்மொழிந்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (04) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், அரச பொது நிறுவனங்கள் (கோப்) குழுவில் பணியாற்றுவதற்கு எதிர்க்கட்சியினால் ஹர்ஷ டி சில்வாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. என்றாலும் தற்போது அவர் அந்த பதவியில் இருந்து சுய விருப்பத்தின் பேரில் பதவி விலகி இருக்கின்றார். அதனால் குறித்த இடத்திற்கு குழுவின் (கோப்) முன்னாள் தலைவர் பேராசிரியர் சரித்த ஹேரத்தை முன்மொழிவதாக குறிப்பிட்டார்.
அத்துடன் கோப் மற்றும் கோபா குழுக்களின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்குமாறு நாங்கள் இந்த சபையிலும் சபைக்கு வெளியிலும் பல தடவைகள் கோரிக்கை விடுத்திருந்தோம். அத்துடன் இந்த பதவிகளின் தலைமை பதவிகளுக்கு கபீர் ஹாசிம் மற்றும் இரான் விக்ரமரத்ன ஆகியோரை பரிந்துரை செய்திருந்தோம்.
அதனை சபாநாயகராக நீங்களும் ஏற்றுக் கொண்டிருந்தீர்கள். அதேபோன்று தற்போதைய ஜனாதிபதி பிரதமராக இருக்கும் போது எமது கோரிக்கைக்கு சபையில் இணக்கம் தெரிவித்திருந்தார்.
என்றாலும் தற்போது அந்த குழுக்களுக்கான தலைவர் பதவி வேறு முறைமைகளில் வேறு நபர்களை நியமிக்கப் போவதாக எமக்கு தகவல் கிடைத்திருக்கின்றது. அதனால் கோப் மற்றும் கோபா குழுக்களின் தலைவர் பதவி எதிர்க்கட்சிக்கு கிடைக்கம் சந்தர்ப்பம் இல்லாமல் போயிருக்கின்றது.
எனவே அன்று பிரதமராக இருந்த தற்போதைய ஜனாதிபதி மற்றும் சபாநாயகரான நீங்கள் வாக்குறுதி அளித்ததன் பிரகாரம் கோப் மற்றும் கோபா குழுங்களின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.
நேற்றையதினம் (03) கோப் மற்றும் கோபா குழுக்களுக்கு தலா 27 எம்.பிக்களின் பெயர்களை சபாநாயகர் பெயர் குறித்து அறிவித்திருந்தார்.
குறித்த குழுக்களில் கோபா குழுவில் பேராசிரியர் சரித்த ஹேரத்தின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ள போதிலும், கோப் குழுவில் அவரது பெயர் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை.
இது தொடர்பில், பேராசிரியர் சரித்த ஹேரத், தனது ட்விட்டர் கணக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை சாடி, பதிவொன்றை இட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்திலிருந்து வெளியேறி சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ள எம்.பிக்களில் அதிகமானோரின் பெயர்கள், கோப் மற்றும் கோபா குழுக்களில் உள்வாங்கப்படவில்லையென இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது தயாசிறி ஜயசேகர, விமல் வீரவன்ச உள்ளிட்டோர் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment