(எம்.எப்.எம்.பஸீர்)
'புனர்வாழ்வு பணியகம்' எனும் சட்ட மூலத்தில், பாராளுமன்ற குழு நிலையின் போது முன்னெடுக்க வேண்டிய திருத்தங்கள் பல தொடர்பில் சட்டமா அதிபர் அரசாங்கத்துக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கனிஷ்கா டி சில்வா, உயர் நீதிமன்றுக்கு அறிவித்தார்.
அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் நடத்துவோரை துன்புறுத்தும் நோக்குடன், 'புனர்வாழ்வு பணியகம்' எனும் சட்ட மூலத்தை அரசாங்கம் பாராளுமன்றில் சமர்ப்பித்துள்ளதாகக்கூறி தாக்கல் செய்யப்பட்டுள்ள 8 விஷேட மனுக்கள் மீதான விசாரணைகள் நேற்று (3) ஆரம்பிக்கப்பட்டன.
நீதியரசர் காமினி அமரசேகர தலைமையிலான நீதியரசர்களான மஹிந்த சமயவர்தன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோரை உள்ளடக்கிய மூவர் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில், குறித்த மனுக்கள் விசாரணைக்கு வந்தன.
இதன்போதே அரசாங்கத்துக்கு சட்டமா அதிபர் அளித்துள்ள உத்தேச குழு நிலை திருத்தங்கள் தொடர்பில் ஆவணமொன்றினை மன்றுக்கு சமர்ப்பித்து குறித்த சட்ட மூலத்தில் திருத்தம் கொண்டுவரப்படும் என அறிவித்தார்.
கோட்டா கோ கம போராட்ட கலத்தில் முன்னணியில் செயற்பட்டதாக கூறப்படும் சட்டத்தரணி அமில சுயம எகொடமஹவத்த, பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார், இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தரிந்து ஜயவர்தன, அருட் தந்தை ஜீவந்த பீரிஸ், மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையம் உள்ளிட்ட 8 பேர் விஷேட மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த 23 ஆம் திகதி பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் சேர்க்கப்பட்டுள்ள புனர்வாழ்வு பணியக சட்ட மூலத்தின் அரசியலமைப்பு அனுகூலத் தன்மையை சவாலுக்கு உட்படுத்தி இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சட்டமா அதிபரை பிரதிவாதியாக பெயரிட்டுள்ள இந்த விஷேட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதில் 6 மணு தாரர்கள் சார்பிலான சமர்ப்பணங்கள் நேற்று முன்வைக்கப்பட்டன. குறித்த மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணிகளான நுவன் போப்பகே, சுரேன் பெர்ணான்டோ, புலஸ்தி ஹேவமான்ன, ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட சட்டத்தரணிகள் வாதங்களை முன்வைத்தனர்.
நேற்று இம்மனுக்கள் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே சட்டமா அதிபருக்காக மன்றில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரால் கனிஷ்கா டி சில்வா, இச்சட்ட மூலம் ஊடாக நிறுவப்படும் புனர்வாழ்வு பணியகத்தை சட்ட ரீதியாக நீதிவான் நீதிமன்றம் மேற்பார்வை செய்யும் வகையில் திருத்தம் செய்வதற்கான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
அதன்படி மாதத்துக்கு ஒரு முறை குறித்த பணியகம் நீதிவானின் மேற்பார்வைக்கு உள்ளாக்கப்படல் வேண்டும் என திருத்தம் செய்ய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரால் கனிஷ்கா டி சில்வா மன்றுக்கு அறிவித்தார்.
இதனைவிட, ஏதேனும் முறைப்பாடுகள் கிடைக்கும் பட்சத்தில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, பணியகத்துக்கு சென்று விசாரணைகளை முன்னெடுக்க முடியுமான வகையில் திருத்தங்களை முன்னெடுக்கவும் ஆலோசனை வழங்கப்ப்ட்டுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரால் கனிஷ்கா டி சில்வா குறிப்பிட்டார்.
இந்நிலையில் வாதங்களை முன்வைத்த மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகள் இந்த சட்ட மூலமானது அரசியலமைப்பின் 3 மற்றும் 4 ஆம் உறுப்புரைகளை மீறும் வகையில் அமைந்துள்ளதாகவும் மக்களின் நீதித்துறை அதிகாரங்களை இல்லாமல் செய்யும் வகையில் அமைந்துள்ளதாகவும் வாதிட்டனர்.
சட்ட மூல அறிமுகம் பிரகாரம், தவறான அல்லது நாசகார செயல்களில் ஈடுபடும் போராளிகள் மற்றும் தனி நபர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதே சட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என கூறப்பட்டிருப்பினும், அந்த விதிமுறைகளுக்கு எந்த விளக்கமும் வழங்கப்படவில்லை என்று மனுதாரர்கள் சார்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
அவ்வாறான நிலையில், உத்தேச சட்ட மூலம் கருத்து சுதந்திரம் மற்றும் அரசியலமைப்பினால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள ஏனைய அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என மனுதாரர்கள் சார்பில் வாதிடப்பட்டது.
அத்துடன் இச்சட்ட மூலம் சட்ட நீதித்துறையை இராணுவ மயமாக்குவதற்கு வழி வகுக்கும் எனவும் அது மக்களின் இறையாண்மையை மீறும் செயல் எனவும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டினர்.
அவ்வாறான நிலையில் குறித்த சட்ட மூலத்தை நிறைவேற்ற வேண்டுமானால் பாரளுமன்றின் மூன்றிலிரு பெரும்பான்மைக்கு மேலதிகமாக சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம் என தீர்ப்பளிக்குமாறு கோரினர்.
இந்நிலையில் நேற்றையதினம் 6 மனுதாரர்களின் சமர்ப்பணங்கள் நிறைவடைந்த நிலையில், இன்று (4) ஏனைய இரு மனுதாரர்கள் மற்றும் பிரதிவாதியான சட்ட மா அதிபரின் சமர்ப்பணம் ஆகியன இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment