(இராஜதுரை ஹஷான்)
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. தமக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்ய நாட்டு மக்களுக்கு முழு உரிமை உண்டு. உள்ளூராட் சிமன்றத் தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்பட வேண்டும். இல்லாவிடின் நீதிமன்றம் செல்வோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் காங்கிரசின் காரியாலயத்தில் இன்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, கொழும்பு நகரின் பல பகுதிகளை அதி உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தி வெளியிட்ட அதி விசேட வர்த்தமானியை ஜனாதிபதி நாட்டு மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இரத்து செய்துள்ளார்.
ஜனநாயகத்துக்கு எதிரான அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஊடகங்கள் சுட்டிக்காட்டுவதால் ஊடகங்களுக்கு எதிரான அடக்கு முறையை அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டுள்ளது.
ஊடக சுதந்திரத்துக்கு எதிராக அரசாங்கம் செயற்பட்டால் மோசமான எதிர் விளைவை அரசாங்கம் எதிர்கொள்ள நேரிடும். ஜனாதிபதி மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் அங்கிகாரம் இல்லாத காரணத்தினால்தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாதுகாப்பு அம்சங்களை பலப்படுத்திக் கொள்கிறார்.
பாராளுமன்ற ஜனநாயகத்துக்கமைய இந்த அரசாங்கத்தை வெகுவிரைவில் வீழ்த்துவோம். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதமளவில் நடத்த வேண்டும்.
மாகாண சபைத் தேர்தலை காலவரையறையின்றி பிற்போட்டுள்ளதை போன்று அரசாங்கம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலையும் பிற்போட பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.'
தமக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்துகொள்ளும் உரிமை நாட்டு மக்களுக்கு உண்டு. உள்ராட்சி மன்றத் தேர்தலை விரைவாக நடத்தும் அதிகாரம் மற்றும் பொறுப்பு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உண்டு. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் ஆண்டுமுதல் காலாண்டில் நடத்தப்பட வேண்டும், இல்லாவிடின் நீதிமன்றம் செல்வோம் என்றார்.
No comments:
Post a Comment