பாராளுமன்றத்தின் செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதன் தாக்கம் நிறைவேற்று, நீதித்துறையின் மீதும் செல்வாக்கு செலுத்தும் - விஜயதாஷ ராஜபக்ஷ - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 5, 2022

பாராளுமன்றத்தின் செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதன் தாக்கம் நிறைவேற்று, நீதித்துறையின் மீதும் செல்வாக்கு செலுத்தும் - விஜயதாஷ ராஜபக்ஷ

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம். வசீம்)

பாராளுமன்ற செயற்பாட்டுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதன் தாக்கம் நிறைவேற்று மற்றும் நீதித்துறையின் மீதும் செல்வாக்கு செலுத்தும். பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் தனிப்பட்ட விடயங்களுக்கு பாராளுமன்ற வரப்பிரசாதங்கள் ஊடாக முக்கியத்துவம் வழங்குவதால் மக்கள் பாராளுமன்ற கட்டமைப்பை வெறுக்கிறார்கள் என நீதி, சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஷ ராஜபக்ஷ தெரிவித்தார்.

சபாநாயகர் தலைமையில் புதன்கிழமை (05) இடம்பெற்ற இலங்கை மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு இடையில் குற்றவாளிகளை மீள ஒப்படைத்தல் தொடர்பான சட்டமூலம் மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, பாராளுமன்ற நிலையியல் கட்டளையில் திருத்தம் செய்யும் அதிகாரம் அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ளது, 2018ஆம் ஆண்டு நிலையியல் கட்டளை உருவாக்கப்பட்டது.

கால மாற்றத்திற்கமைய நிலையியல் கட்டளையில் ஒரு சில திருத்தங்கள் உள்வாங்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளார்கள்.

நாட்டின் நிதி நிலைமை தொடர்பான முழு அதிகாரம் பாராளுமன்றத்துக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது. சட்ட இயற்றல் பாராளுமன்றத்தின் தலையாய பொறுப்பாகும், ஆகவே பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் ஒழுக்கமானதாகவும், வெளிப்படைத் தன்மையானதாகவும் அமைய வேண்டும்.

அரச கொடுக்கல் வாங்கள்களில் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடிகளை கோப் குழு உள்ளிட்ட பாராளுமன்ற கண்காணிப்பு குழுக்கள் வெளிக்கொண்டு வந்துள்ளன.

கண்காணிப்பு குழுக்களின் அறிக்கைகள் வெறும் அறிக்கையாக மாத்திரம் மட்டுப்படுத்தாமல், அதன் பரிந்துரைகளை செயற்படுத்த பாராளுமன்ற நிலையியல் கட்டளை ஊடாக திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.

பாராளுமன்றத்தின் செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படுமாயின் அது நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறை ஆகிய துறைகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்,சட்டம், நீதி மற்றும் நிறைவேற்று ஆகிய துறைகளின் செயலொழுங்கு பாதிப்பு ஏற்பட்டால் நாட்டு மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதமளிக்க முடியாத நிலை ஏற்படும்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் தனிப்பட்ட விடயங்களுக்கு பாராளுமன்ற வரப்பிரசாதங்கள் ஊடாக முக்கியத்துவம் வழங்குவதால் மக்கள் பாராளுமன்ற கட்டமைப்பை வெறுக்கிறார்கள். அரசியலமைப்புக்கு அமைய சகல தரப்பினரும் செயற்பட்டால் எப்பிரச்சினையும் ஏற்படாது என்றார்.

No comments:

Post a Comment