(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)
அரச நிதி குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்கியிருந்தால் நாட்டின் நிதி தொடர்பான உண்மையை கண்டறிந்து அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்போம். நாடு இந்தளவு நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்காது என எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (05) இடம்பெற்ற நிலையியற் கட்டளை திருத்தம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், ஜுன் 7 ஆம் திகதி பாராளுமன்ற குழு கூடியபோது கோப் மற்றும் கோபா குழுக்களின் தலைவர் பதவிகளை எதிர்க்கட்சிக்கு வழங்குமாறு ஜூலை மாதம் 7 ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற நடவடிக்கைகள் குழுவில் பிரேரணை கொண்டுவந்தபோது அதனை ஏற்றுக் கொண்டார்கள். இதன்போது சபாநாயகர் அதற்கு தேவையான நிலையியற் கட்டளையில் திருத்தம் மேற்கொள்ளுமாறு கூறியிருந்தார். ஆனால் அந்த திருத்தம் தற்போது மேற்கொள்ளப்படவில்லை.
அத்துடன் கோபா கூட்டத்தில் கபீர் ஹாசிமுக்கு அதன் தலைவர் பதவியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை வரவேற்கின்றேன். அத்துடன் கோப் குழு தலைவர் பதவிக்கான வாக்கெடுப்பும் நடக்கவுள்ளது. இந்த வாக்கெடுப்பை நிகழ்நிலையில் நடத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன். ஏனெனில் எமது உறுப்பினர்கள் பலர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.
அத்துடன் துறைசார் மேற்பார்வை குழு நல்லாட்சி காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் கடந்த 2 வருடங்களாக அது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. இந்தக் குழு நாட்டுக்கும் எம்.பிக்களுக்கும் நல்லதே. ஆனால் இரண்டு வருடங்களாக அது நிறுத்தப்பட்டுள்ளது. என்றாலும் தற்போது அதனை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதை வரவேற்கின்றோம்.
அத்துடன் அரச நிதிக் குழு தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க வேண்டும் என நாங்கள் இரண்டு வருடங்களுக்கு முன்னரே தெரிவித்து வந்தோம். அதனை அரசாங்கம் செய்யவில்லை. அமெரிக்கா உட்பட ஐராேப்பிய நாடுகளில் இவ்வாறான குழுக்களின் தலைவர் பதவி எதிர்க்கட்சிகே வழங்கப்பட்டிருக்கின்றது. இது அரசாங்கத்துக்கும் நல்லது.
ஏனெனில் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் தலைவராக இருக்கும்போது அரச தரப்பு உறுப்பினர்கள் மோசடிகளில் ஈடுபட அச்சப்படுவார்கள். அதேநேரம் நிதிக்குழுவின் தலைமை பதவிக்கு நாங்கள் ஹர்ஷ டி சில்வாவை நியமிக்க பரிந்துரை செய்தோம். ஆனால் சபாநாயகரும் முன்னாள் பிரதமரும் நிலையியல் கட்டளைகளை நிறுத்தி, அதனை ஆளும் கட்சிக்கு வழங்கினர்.
இது தொடர்பான நடவடிக்கைகளை அன்று முன்னெடுத்திருந்தால் இப்போது நாட்டுக்கு ஏற்பட்டிருந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. அப்போது ஆளும் கட்சி உறுப்பினர்கள் பணம் இருப்பதாக கூறினர். ஆனால் முன்னரே எங்களிடம் நிதி குழுவின் தலைவர் பதவியை வழங்கியிருந்தால் உண்மையை கண்டறிந்து அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்போம். சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்வதற்கு தீர்மானித்திருப்போம். அப்போது மக்கள் கஷ்ட நிலைக்கு ஆளாகி இருக்க மாட்டார்கள்.
அத்துடன் 1971 இல் ஏற்பட்ட வன்முறைகளின் போது மக்கள் ஆணை இல்லாமல் போகவில்லை என்று அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறியுள்ளார். அது உண்மைதான் ஆனால் இப்போது உள்ள நிலைமை வேறு. இப்போது போராட்டத்தால் பிரதமர், ஜனாதிபதி, அமைச்சரவை உள்ளிட்ட மக்கள் ஆணை உள்ளவர்கள் விட்டுச் சென்றனர். ஆனால் ஆணை இல்லாதவர்கள் பதவிகளை பெற்றுள்ளனர் என்றார்.
No comments:
Post a Comment