உலக நாடுகள் அனைத்தும் எமது நாடு தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்தி வரும் நிலையில், ஜனநாயக நாடுகள் மத்தியில் இலங்கையை தனிமைப்படுத்தும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (5) இடம்பெற்ற நிலையியற் கட்டளை திருத்தம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் நாங்கள் பல்கலைக்கழக மாணவர்களாக இருந்தபோது பல்வேறு ஜனநாயக விரோத செயல்களுக்கு எதிராக அன்று இருந்த அரசாங்கங்களுக்கு எதிராக வீதிக்கிறங்கி போராட்டம் செய்திருக்கின்றோம்.
எமது மூதாதையர்களும் அவர்களது உரிமைகளுக்காக போராடி இருக்கின்றனர். ஆனால், அப்போது இருந்த அரசாங்கங்கள் பேராட்டக்காரர்களுக்கு புனர்வாழ்வளிக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
எமது நாட்டில் புனர்வாழ்வளிக்கும் முறை இருக்கின்றது. சிறிய குற்றங்களுக்கு குற்றவாளியாக்கப்பட்டால், நீதிமன்ற உத்தரவுக்கமைய, அவர்கள் புனர்வாழ்வளிக்கப்படுவார்கள். ஆனால், இன்று போராட்டக்காரர்களுக்கு புனர்வாழ்வளிக்க அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது. இந்த தீர்மானத்தை யார் எடுப்பது? பாதுகாப்பு அமைச்சரா அல்லது செயலாளரா என கேட்கின்றேன். புனர்வாழ்வளிப்பதற்கான அளவுகோல் என்ன? அதனை தீர்மானிப்பது யார்?
மேலும், உலக நாடுகள் அனைத்தும் இலங்கை தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில் ஜனநாயகத்துக்கு சவால் விடும் செயற்பாடுகளை அரசாங்கம் கைவிடுவது முக்கியமாகும். அதேவேளை, நாட்டு மக்களை மேலும் நெருக்கடி நிலைக்குத் தள்ளும் செயற்பாடுகளையும் அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும்.
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பு வியாழக்கிழமை (6) நடைபெறும் நிலையில், மேலும், எமது நாட்டை சர்வதேசத்தில் இருந்து தனிமைப்படுத்த வேண்டாம். வாக்கெடுப்பில் பின்னடைவை தவிர்த்துக் கொள்ளும் வகையில் அரசாங்கம் செயற்படுவது அவசியம். நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் செயற்படுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
களனிப் பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் போது அந்த மாணவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலை நியாயப்படுத்தும் வகையில் நிதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ கருத்துக்களை முன்வைத்திருந்தார்.
பல்கலைக்கழக மாணவர்கள் தங்களது கருத்துக்களை வெளியிடுவதற்கான சுதந்திரமும் உரிமையும் வழங்கப்பட வேண்டும். வசந்த முதலிகே தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாமிலிருந்து அவர் நள்ளிரவில் வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார் என்பது தெரியவந்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். இளைஞர்கள் குரலுக்கு செவிமடுக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment