(நா.தனுஜா)
விரிவான கட்டமைப்புக்களின் தலைவர்களுடனும் கொள்கைசார் வல்லுனர்களுடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்வதானது நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் நிலைவரம் தொடர்பில் பொதுமக்கள் கொண்டிருக்கும் கரிசனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உதவும் என்று அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் சபாநாயகரும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவருமான கரு ஜயசூரிய மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது நாடு தற்போது முகங்கொடுத்திருக்கும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி குறித்து அமெரிக்கத் தூதுவரிடம் சுட்டிக்காட்டிய முன்னாள் சபாநாயகர், குறிப்பாகப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்சியடைவதற்கு அரசியல் ரீதியான கொள்கைகளுக்கு அப்பால் சர்வதேச நாடுகள் உதவக்கூடிய வழிமுறைகள் தொடர்பிலும் எடுத்துரைத்துள்ளார்.
அதுமாத்திரமன்றி தற்போதைய சூழ்நிலையில் தாம் எந்தவொரு அரசியல் கூட்டணிகளையும், பிரதிநிதித்துவப்படுத்தப் போவதில்லை என்றும், மாறாக பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதை முன்னிறுத்திய செயற்திட்டங்கள் வகுக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் தூதுவரிடம் தெரிவித்துள்ளார்.
அதேவேளை கரு ஜயசூரியவுடனான சந்திப்பு தொடர்பில் அமெரிக்கத் தூதுவர் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
'விரிவான கட்டமைப்புக்களின் தலைவர்களுடனும் கொள்கைசார் வல்லுனர்களுடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்வதானது நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் நிலைவரம் தொடர்பில் பொதுமக்கள் கொண்டிருக்கும் கரிசனைகளுக்குத் தீர்வுகாண்பதற்கு உதவும்.
அந்த வகையில் இலங்கையின் தற்போதைய நிலைவரம் குறித்தும், நீண்ட காலப் பொருளாதார வளர்ச்சிக்கு அமெரிக்கா எவ்வாறு உதவ முடியும் என்பது குறித்தும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவுடன் கலந்துரையாடினேன்' என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment