இலங்கையுடனான டெஸ்ட் தொடரிலிருந்து விலகினார் பங்களாதேஷ் வீரர் ஹொரிபுல் இஸ்லாம் - News View

About Us

About Us

Breaking

Thursday, May 19, 2022

இலங்கையுடனான டெஸ்ட் தொடரிலிருந்து விலகினார் பங்களாதேஷ் வீரர் ஹொரிபுல் இஸ்லாம்

(என்.வி.ஏ.)

இலங்கைக்கு எதிராக சட்டாக்ரோம் விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது காயத்திற்குள்ளான பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் ஹொரிபுல் இஸ்லாம், தொடர்ந்து விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டியின் நான்காம் நாள் மாலை 167ஆவது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் கசுன் ராஜித்த வீசியபோது ஷொரிபுல் இஸ்லாமின் வலது கையை பந்து பதம் பார்த்தது.

உடற்கூற்று மருத்துவர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்ததுடன் ஓய்வு பெறுமாறு ஆலோசனை வழங்கினார். ஆனால், அவர் தொடர்ந்து துடுப்பெடுத்தாடி கொண்டிருந்தார்.

3 ஓவர்கள் கழித்து வலி தாங்க முடியாமல் தரையில் அமர்ந்த அவர் அதன் பின்னர் ஓய்வு பெறுவதாக அறிவித்ததுடன் பங்களாதேஷின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

இதனை அடுத்து நடத்தப்பட்ட எக்ஸ்-ரே பரிசோதனையில் அவரது வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டது.

இதன் காரணமாக இன்னும் 4 அல்லது 5 வாரங்களுக்கு அவரால் விளையாட முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அவர் பெரும்பாலும் விளையாடமாட்டார் என கருதப்படுகிறது.

இலங்கைக்கு எதிராக மே மாதம் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பங்களாதேஷ் குழாம் மாற்றமின்றி அறிவிக்கப்பட்டுள்ளதுடன் ஷொரிபுல் இஸ்லாமுக்கு பதிலாக யாரும் பெயரிடப்படவில்லை.

இதேவேளை, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள், 3 சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகள், 3 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பங்களாதேஷ் விளையாடவுள்ளது.

இதனை முன்னிட்டு பங்களாதேஷ் அணி ஜூன் மாதம் 5ஆம் திகதி மேற்கிந்தியத் தீவுகளுக்கு புறப்பட்டுச் செல்லவுள்ளது.

No comments:

Post a Comment