சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் மீதான தாக்குதல் : கைதான மூவருக்கும் பிணை - News View

About Us

About Us

Breaking

Thursday, May 19, 2022

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் மீதான தாக்குதல் : கைதான மூவருக்கும் பிணை

(எம்.எப்.எம்.பஸீர்)

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் மீதான தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, 3 சந்தேகநபர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (19) உத்தரவிட்டது. கோட்டை நீதிவான் திலின கமகே இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார். குறித்த மூவரையும் அடையாள அணிவகுப்பிற்காக இன்று 19 ஆம் திகதி சிறைச்சாலை அதிகாரிகள் மன்றில் ஆஜர் செய்தனர்.

இதன்போது முதல் இரு சந்தேக நபர்களை மட்டும் இரு சாட்சியாளர்கள் அடையாளம் காட்டினர். எனினும் அவ்விரண்டு பேரும் சம்பவம் நடந்த இடத்தில் இருந்தவர்கள் மட்டுமே என சாட்சியாளர்கள் குறிப்பிட்டதாகவும், அவர்கள் தாக்குதல் நடாத்தியதாகவோ அல்லது சொத்து சேதம் ஏரற்படுத்தியதாகவோ சாட்சியாளர்கள் சாட்சியம் அளிக்கவில்லை எனவும் திறந்த மன்றில் நீதிவான் திலின கமகேவினால் சுட்டிக்காட்டப்பட்டது.

அடையாள அணிவகுப்பு, நீதிவான் திலிண கமகேவின் உத்தரவுக்கு அமைய , சட்டத்தரணி கிங்ஸ்லி ஹெட்டி ஆரச்சியினால் நடாத்தப்பட்ட நிலையில், அடையாள அணிவகுப்பு தொடர்பான குறிப்பில் உள்ள விடயங்களைக் காட்டி நீதிவான் இதனை திறந்த மன்றில் அறிவித்தார்.

இந்நிலையில் இன்று, கொள்ளுபிட்டி பொலிசார் சார்பில் பிரதான பொலிஸ் பரிசோதகர் ரத்னாநயக்கவுடன், குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி உபுல் பெரேரா மன்றில் ஆஜராகி மேலதிக விசாரணை அறிக்கை ஒன்றினை சமர்ப்பித்தனர்.

அவர்கள், தேசபந்து தென்னகோன் தாக்குதலுக்கு உள்ளாகும் போது பயணித்த பொலிஸ் திணைக்களத்தின் ஜீப் வண்டியையும் சந்தேக நபர்கள் சேதப்படுத்தி தீ வைத்து எரித்துள்ளதாக கூறி பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் கீழ் மற்றொரு குற்றச்சாட்டை முன் வைத்தனர்.

அதன் கீழ் அவர்களுக்கு பிணை வழங்க முடியாது எனவும் விசாரணைகள் முடிவடையாத நிலையில் அவர்களை விளக்கமறியலில் வைக்குமாரும் பொலிசார் கூறினர்.

இதன்போது நீதிவான் திலின கமகே, ஜீப் வண்டிக்கு இந்த சந்தேக நபர்கள் தீ வைத்ததாக சாட்சிகள் உள்ளதா என வினவினார். எனினும் பொலிசார் அதற்கான சாட்சியத்தை முன்வைக்க தவறினர்.

மே 9 வன்முறைகள் குறித்த ஒட்டு மொத்த விம்பத்தை, தேசபந்து தென்னகோன் மீதான தாக்குதல் எனும் ஒரு சம்பவத்தின் மீது திணித்து வெளிப்படுத்தி, உத்தரவுகளை பெற முயல வேண்டாம் என இதன்போது நீதிவான் பொலிசாருக்கு தெரிவித்தார்.

இதன்போது சந்தேக நபர்களுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குனரத்னவின் கீழ் ஹசான் நாணயக்கார உள்ளிட்ட குழுவினரும், சட்டத்தரணி நுவன் போப்பகேவுடன் சட்டத்தரணி அமில பல்லேவல உள்ளிட்ட குழுவினரும் ஆஜராகினர்.

அவர்களும் நீதிவான் பொலிசாரிடம் எழுப்பிய சாட்சிகள் குறித்த கேள்வியையே எழுப்பி தமது சேவை பெறுநர்களுக்கு பிணை கோரினர்.

இந்நிலையில் விடயங்களை ஆராய்ந்த நீதிவான், பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுக்கு சந்தேக நபர்களுக்கு எதிராக எந்த சாட்சியும் இல்லை எனக்கூறி அவர்களை தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுவித்தார்.

இது குறித்த அடுத்த கட்ட வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஜூன் 9 ஆம் திகதி நடை பெறவுள்ளது.

No comments:

Post a Comment