இலங்கை கால்பந்தாட்ட அணியிலிருந்து ஒதுங்கினார் வசீம் ராஸிக் : பேரிழப்பு என சுட்டிக்காட்டியுள்ள விமர்சகர்கள் - News View

About Us

About Us

Breaking

Thursday, May 19, 2022

இலங்கை கால்பந்தாட்ட அணியிலிருந்து ஒதுங்கினார் வசீம் ராஸிக் : பேரிழப்பு என சுட்டிக்காட்டியுள்ள விமர்சகர்கள்

(நெவில் அன்தனி)

கால்பந்தாட்ட முகாமைத்துவ குறைபாடுகள் காரணமாக தேசிய அணியிலிருந்து வசீம் ராஸிக் ஒதுங்கி கொண்டுள்ளார்.

கடந்த மூன்று வருடங்களில் இலங்கை அணியின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றிய வசீம் ராஸிக் தேசிய அணியிலிருந்து ஒதுங்கியமை அணிக்கு பேரிழப்பு என கால்பந்தாட்ட விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

'முகாமைத்துவத்தின் சில குறைபாடுகள் காரணமாக ஆசிய கால்பந்தாட்ட கூட்டுச் சம்மேளன (ஏ.எவ்.சி.) தகுதிகாண் போட்டிகளில் இலங்கைக்காக நான் பங்குபற்றமாட்டேன். எனது அணி சிறப்பாக விளையாட வாழ்த்துகிறேன்' என தனது உத்தியோகபூர்வ இன்ஸ்டக்ராம் கணக்கில் வசீம் ராஸிக் குறிப்பிட்டுள்ளார்.

2012 இலிருந்து 2021 வரை ஜேர்மன் கழங்களுக்காக கால்பந்தாட்டப் போட்டிகளில் விளையாடி திறமையை வெளிப்படுத்தி வந்த அஹ்மத் வசீம் ராஸிக், 2019ஆம் ஆண்டு இலங்கை அணியுடன் இணைந்த பின்னர் இலங்கை கால்பந்தாட்ட விளையாட்டில் பாரிய மாற்றம் ஏற்பட்டதை கால்பந்தாட்டப் பிரியர்கள் மறக்கவோ, மறுக்கவோ மாட்டார்கள்.

இலங்கை அணியின் பெரு முன்னேற்றத்துக்கு வழிவகுத்த வசீம் ராஸிக், இந்தியாவில் கோகுலம் கேரளா அணியில் இணைவதற்கு முன்னரே, இலங்கை கால்பந்தாட்ட முகாமைத்துவம் குறித்து தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தார். இப்போது வெளிப்படையாக தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்துக்கும் தனக்கும் இடையில் கருத்து வேறுபாடு நிலவுவதாலேயே இலங்கை அணியிலிருந்து விலகத் தீர்மானித்ததாக வசீம் ராஸிக் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் கடந்த வருடம் நடைபெற்ற 4 நாடுகள் அழைப்பு கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் அதிக கோல்களைப் போட்ட (7 கோல்கள்) வீரருக்கான தங்கப் பாதணியை வசீம் ராஸீன் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியிலிருந்து வசீம் ராஸிக் ஒதுங்கிக் கொண்டுள்ளமை சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளில் இலங்கைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

இற்றைக்கு 27 வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் சார்க் தங்கக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி நடைபெறவிருந்த நிலையில் முன்னணி வீரரான மொஹம்மத் அமானுல்லா, கருத்து வேறுபாடு காரணமாக குழாத்திலிருந்து விலகிக் கொண்டிருந்தார்.

ஆனால், அப்போதிருந்த பிரபல கால்பந்தாட்ட நிருவாக அதிகாரி ஒருவர், அமானுல்லாவின் வீட்டுக்கு நேரடியாக சென்று அவரை சமாதானப்படுத்தி மீண்டும் அணியில் இணையுமாறு வினயமாக வேண்டுகோள் விடுத்தார்.

இறுதியில் என்ன நடந்தது? இலங்கை அணியில் இணைந்த அமானுல்லா, இலங்கையின் தங்கக் கிண்ண வெற்றியில் பெரும் பங்காற்றியதுடன் அதிசிறந்த வீரருக்கான தங்கப் பாதணியையும் வென்றெடுத்தார்.

தற்போதைய நிருவாகத்தினர் வசீம் ராஸிக்குடனான கருத்து வெறுபாடுகளை களைந்து அவரை மிண்டும் அணியில் இணைத்துக் கொள்ள முன்வருவார்களா? என பெயர் குறிப்பிட விரும்பாத பிரபல முன்னாள் வீரர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

உஸ்பெகிஸ்தானில் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஏஎவ்சி தகதிகாண் சுற்றில் சி குழுவில் உஸ்பெகிஸ்தான், தாய்லாந்து, மாலைதீவுகள் ஆகிய நாடுகளுடன் இலங்கையும் இடம்பெறுகின்றது.

No comments:

Post a Comment