(ஆர்.ராம்)
கனடா பாராளுமன்றத்தில் மே 18 ஆம் நாளை இனப் படுகொலை தினமாக அங்கீகரிக்கும் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ஹரி ஆனந்தசங்கரி மே 18ஆம் நாளை இனப் படுகொலை தினமாக அங்கீகரிக்கும் பிரேரணையை சமர்ப்பித்திருந்தார்.
பாராளுமன்றில் குறித்த பிரேரணை முன்நகர்த்தப்பட்டிருந்த நிலையில், தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்பட்டதை அங்கீகரிப்பதுடன், ஒவ்வொரு ஆண்டும் மே 18ஆம் திகதியை தமிழ் இனப் படுகொலை நினைவு தினமாக ஏற்றுக் கொள்வதாகவும் சபை தெரிவித்துள்ளது.
இந்தப் பிரேரணைக்கு லிபரல், கன்சர்வேட்டி உட்பட பாராளுமன்றத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளின் 338 உறுப்பினர்களும் ஏகமனதாக அங்கீகாரம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழினப் படுகொலையை அங்கீகரித்து முதல் தேசத்தின் பாராளுமன்றம் என்ற பெருமையை கனேடிய பாராளுமன்றம் பெற்றுக் கொண்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.
மேலும், இறுதிப்போரில் 70,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 3 இலட்சம் பொதுமக்கள் இடம்பெயர்ந்த நிலையில் தப்பிப்பிழைத்தவர்களும் அவர்களது குடும்பங்களும் போரின் வடுக்களுடன் தொடர்ந்து வேதனைப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனைவிடவும், காணாமலாக்கப்பட்டவர்களின் அன்புக்குரியவர்கள் தமது சொந்தங்களுக்கான கண்ணீருடன் அலைகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் மக்களுக்கான நீதி தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வரும் நிலையில் தமிழினப் படுகொலை நிகழ்ந்தது என்பதை உறுதி செய்வது முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொறுப்புக்கூறல், நீதி, சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கான எமது கூட்டுப் போராட்டத்தில் இது ஒரு முக்கியமான படியாகும் பொறுப்புக்கூறல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை எதிர்கொள்வதை உறுதி செய்வதற்காக, இன்னும் நிறைய வேலைகள் செய்ய வேண்டியுள்ளது என்பதை நான் அறிவேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment