கடந்த மார்ச் 31 ஆம் திகதி மிரிஹான பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட அமைதியின்மையின் போது இராணுவ பஸ் ஒன்றுக்கு தீ வைத்த சந்தேகநபரை CID யினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த சம்பவத்தில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினருக்கு சொந்தமான பல வாகனங்கள் தீயிட்டு அழிக்கப்பட்டிருந்தன.
அதற்கமைய, மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணைகளின் அடிப்படையில், இராணுவப் பேருந்துக்கு தீ வைத்த சந்தேகநபர் இன்று (19) தெரணியகல பிரதேசத்தில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் இராணுவ பஸ்ஸிற்கு தீ வைத்தமை காரணமாக, அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்குச் சொந்தமான முச்சக்கர வண்டியும், 2 மோட்டார் சைக்கிள்களும் தீயில் எரிந்து அழிந்திருந்தன.
அதற்கமைய தற்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கங்கொடவில, விஜேராம பிரதேசத்தில் உள்ள தனியார் வாகன உதிரிப்பாக விற்பனை நிறுவனத்தில் பணிபுரியும் 42 வயதுடைய திருமணமானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் குற்றவியல் குற்றச்சாட்டின் கீழ் நாளையதினம் (20) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
சந்தேகநபரை கைது செய்வது தொடர்பில் காணொளிகள் மற்றும் புகைப்படங்களை ஊடகங்களின் மூலம் வெளியிட்டு பொதுமக்களின் உதவியை கோரியதன் மூலம் கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதற்காக ஆதரவளித்த அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் பொதுமக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment