உலகளாவிய ரீதியில் உணவு நெருக்கடி மேலும் தீவிரமடையும் அபாயம் - எச்சரிக்கை விடுத்துள்ள ஐ.நா. பொதுச் செயலாளர் - News View

About Us

About Us

Breaking

Thursday, May 19, 2022

உலகளாவிய ரீதியில் உணவு நெருக்கடி மேலும் தீவிரமடையும் அபாயம் - எச்சரிக்கை விடுத்துள்ள ஐ.நா. பொதுச் செயலாளர்

உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பின் விளைவாக உலகளாவிய ரீதியில் உணவு நெருக்கடி மேலும் தீவிரமடையும் அபாயம் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமைச்சரவைக் கூட்டமொன்றில் இந்த வாரம் ஆற்றிய உரையின் போது அவரால் விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை குறித்து பிரித்தானிய டெயிலி மெயில் ஊடகம் இன்று வியாழக்கிழமை (19.05.2022) செய்தி வெளியிட்டுள்ளது.

அவர் இதன்போது உலகளாவிய பட்டினி மட்டமானது புதிய உயரமொன்றை எட்டியுள்ளதாக அந்தோனியோ குட்டரெஸ் பிரகடனம் செய்தார்.

உணவு தொடர்பில் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டுள்ள மக்கள் தொகை கொவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றுக்கு முன்னர் இருந்த 135 மில்லியனிலிருந்து இரு வருட காலப் பகுதியில் தற்போது 276 மில்லியனாக அதிகரித்துள்ளதாக அந்தோனியோ குட்டரெஸ் கூறினார்.

பட்டினியில் வாழும் மக்கள் தொகை 2016 ஆம் ஆண்டிலிருந்து 500 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

முக்கிய தானியங்கள், சமையல் எண்ணெய்கள் மற்றும் உலகளாவிய ரீதியில் உணவு உற்பத்தியை ஊக்குவிக்கப் பயன்படும் பசளைகள் ஆகியவற்றின் உற்பத்திகளில் ரஷ்யாவும் உக்ரேனும் பெருமளவு வகிபாகத்தை வகித்து வருகின்ற நிலையில் அந்நாடுகளுக்கிடையிலான போர் மேற்படி உற்பத்திகளைப் பாதித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் இந்தப் பிரச்சினையை தணிவிப்பதற்கான உடன்படிக்கையொன்றை எட்டும் முகமாக அவர் ரஷ்யாவுடனும் ஏனைய முக்கிய நாடுகளுடனும் தொடர்பை ஏற்படுத்திக் கலந்துரையாடி வருகிறார்.

No comments:

Post a Comment