(எம்.மனோசித்ரா)
காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகை வளாகத்தில் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகளின் போது கடுமையான தாக்குதலுக்குள்ளாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இந்நிலையில் மே மாதம் 09 ஆம் திகதி கலவரத்தால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
குறித்த நபர் கடந்த 9 ஆம் திகதி பகல் வேலையில் கொழும்பு பெரஹெர மாவத்தைக்கும் பெய்ரா ஏரிக்கும் இடையிலான நடைபாதையில் காயமடைந்து விழுந்து கிடந்த போது ஊடகவியலாளர்கள் சிலரால் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அன்றையதினம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நிலவிய பதற்ற நிலைமையின் காரணமாகவே குறித்த நபர் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு ராகமை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இன்று (19) குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 47 வயதுடைய குளியாப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். இவரது பிரேத பரிசோதனைகள் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டன.
அதற்கமைய தலை மற்றும் மார்பகப் பகுதியில் ஏற்பட்ட ஆழமான காயமே இவரது உயிரிழப்பிற்கான காரணம் என்று தெரியவந்துள்ளது.
இந்த கொலை தொடர்பில் கொள்ளுபிட்டிய பொலிஸாரினால் கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை கொள்ளுபிட்டி பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பைத் தொடர்ந்து, பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள், அலரி மாளிகை மற்றும் காலி முகத்திடலுக்கு அருகில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து அமைதியின்மை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment