யாழில் விக்கிரகங்கள் திருடிய குற்றச்சாட்டில் இராணுவ சிப்பாய் கைது - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 4, 2022

யாழில் விக்கிரகங்கள் திருடிய குற்றச்சாட்டில் இராணுவ சிப்பாய் கைது

காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்தில் இராணுவ மற்றும் கடற்படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலுள்ள இந்து ஆலயங்களில் விக்கிரகங்கள் திருடிய குற்றச்சாட்டில் 42 வயதுடைய இராணுவச் சிப்பாய் ஒருவர் இராணுவப் பொலிஸாரினால் நேற்று (03) கைது செய்யப்பட்டு, தெல்லிப்பழை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

டிசம்பர் 9 ஆம் திகதிக்கும் 23 ஆம் திகதிக்கும் இடையே தெல்லிப்பழை மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுகளிலுள்ள இந்து ஆலயங்களில் விக்கிரகங்கள் திருடப்பட்டன. 

இந்தச் சம்பவங்கள் தொடர்பில் காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் உப பொலிஸ் பரிசோதகர் நிதர்சன் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை நல்லிணக்கபுரத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவர் முதலில் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் கொழும்புக்கு விரைந்த உப பொலிஸ் பரிசோதகர் நிதர்சன் தலைமையிலான குழுவினர் அங்கு வர்த்தகர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட மேலும் 20 இற்கும் மேற்பட்ட விக்கிரகங்களை மீட்டனர். 

அத்துடன் உயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள இந்து ஆலயங்களில் திருடப்பட்ட விக்கிரகங்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டன.

அவற்றை கொள்வனவு செய்த வர்த்தகர்கள் தலைமறைவாகியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அவற்றில் பல இராணுவ மற்றும் கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களின் இந்து ஆலயங்களின் விக்கிரகங்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையோரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதோடு. சம்பவம் தொடர்பில் குறித்த இராணுவ சிப்பாயிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

(யாழ்.விசேட நிருபர்)

No comments:

Post a Comment