கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் கடந்த டிசம்பர் 28ஆம் திகதி முதலைப் பாலத்தின் கீழ் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வெளிநாட்டில் இருந்து வருகை தந்து வீட்டில் தனிமையில் வாழ்ந்து வந்த 67 வயது பெண்ணை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 21 வயது இளைஞனும் அவரது 19 வயது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் குறித்த பெண்ணின் வீட்டின் அருகாமையில் வசிப்பவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் வாக்குமூலத்தின்படி 67 வயதான குறித்த பெண்ணை கொலை செய்து சடலத்தை மனைவியின் உதவியுடன் பை ஒன்றிற்குள் சுற்றி மோட்டார் சைக்கிளில் கொண்டுசென்று முதலைப் பாலத்திற்கு கீழ் போட்டுள்ளமை தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து சந்தேகநபர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து கொள்ளையிடப்பட்ட தங்க நகைகள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட இளம் தம்பதிகள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் ஜனவரி 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.
(புதுக்குடியிருப்பு விசேட நிருபர்)
No comments:
Post a Comment