(எம்.மனோசித்ரா)
'ட்ரிங்கோ பெற்றோலியம் டேர்மினல்' என்ற கூட்டு நிறுவனத்தின் ஊடாக எஞ்சியுள்ள 61 திருகோணமலை எண்ணெய் குதங்களையும் படிப்பாக இந்தியாவிற்கு உரித்தாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது முற்று முழுதாக நாட்டைக் காட்டிக் கொடுக்கும் செயலாகும். எனவே நாட்டு மக்கள் அனைவரும் வீதிக்கு இறங்கி இதற்கு எதிர்ப்பினை வெளியிட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) வலியுறுத்தியுள்ளது.
மக்களுக்கு தடையின்றி சேவையாற்றுவதற்கு நிறைவேற்றதிகாரம் அத்தியாவசியமானது என்று கூறி, 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றிக் கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதன் ஊடாக மக்களுக்கு செய்த நன்மை என்ன என்றும் ஜே.வி.பி. கேள்வியெழுப்பியுள்ளது.
பத்தரமுல்லையிலுள்ள ஜே.வி.பி. தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஜே.வி.பி. பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் காணப்படும் எந்தவொரு பிரச்சினையிலும் தலையிடுவதற்கு அரசாங்கம் என்ற ஒன்று தற்போது இல்லை. ஜனாதிபதி எந்தவொரு பிரச்சினையையும் பொறுப்பேற்பதற்கோ அல்லது பொறுப்புக் கூறுவதற்கோ தயாராக இல்லை.
அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் காணப்பட்ட கட்டுப்பாட்டு விலைகள் நீக்கப்பட்டு தற்போது அவரவர் விருப்பத்திற்கு பொருட்களின் விலைகளை தீர்மானிக்கும் நிலைமையே காணப்படுகிறது.
இந்த அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை காணப்படுகின்ற போதிலும் மக்களுக்கு எந்த சேவையையும் அவர்களால் செய்ய முடியவில்லை.
அதேபோன்று 20 ஆவது திருத்தத்தினை நிறைவேற்றி நிறைவேற்றதிகாரத்தைப் பெற்றுக் கொண்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதன் மூலம் மக்களுக்கு செய்த நன்மை என்ன? மக்களுக்கு நன்மையைப் பெற்றுக் கொடுப்பதற்கு பதிலாக அராஜக ஆட்சியை மாத்திரமே நடத்திக் கொண்டிருக்கின்றார்.
உண்மையில் தற்போது அரசாங்கம் என்ற ஒன்று இல்லாத நிலைமையே காணப்படுகிறது. உரம் தொடர்பில் ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தினால் விவசாயத்துறை முற்றாக சீரழிந்துள்ளது. இது ஜனாதிபதியின் தீர்மானத்தினால் தாமாக தேடிக் கொண்ட ஒரு பிரச்சினையாகும்.
இவ்வாறு விடப்படும் தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கு அரசாங்கம் முன்வரவில்லை. மாறாக தவறுகளை சுட்டிக்காட்டுபவர்களை பதவிகளிலிருந்து நீக்குகின்றனர். எதிர்காலத்தில் ஏற்படப்போகும் உணவுத் தட்டுப்பாட்டுக்கு ஜனாதிபதியே பொறுப்புக்கூற வேண்டும்.
அரசாங்கத்திடம் முறையான வரிக் கொள்கையொன்று இன்மையால் நாட்டுக்கு கிடைக்கப் பெறும் வருமானமும் அற்றுப் போயுள்ளது. இவ்வாறான நிலையில் கிழங்கு மற்றும் வெங்காயத்திற்கான வரி குறைக்கப்பட்டுள்ளமையால் மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கப் போவதில்லை. வெளிநாடுகளுக்கு விற்கப்படும் தேசிய சொத்துக்களை மீட்பதாகக் கூறிய அரசாங்கம், தற்போது எஞ்சியுள்ளவற்றையும் விற்றுக் கொண்டிருக்கிறது.
நாட்டில் பாரிய டொலர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், டொலரைப் பெறக்கூடிய பிரதான மூலங்களையும் அரசாங்கம் விற்பனை செய்து கொண்டிருக்கிறது. கொழும்பு துறைமுக மேற்கு முனையம் அதானி நிறுவனத்திற்கும், திருகோணமலை எண்ணெய் குதங்கள் இந்தியாவிற்கும் வழங்கப்பட்டுள்ளமை இதற்கு சிறந்த உதாரணமாகும்.
ஏற்கனவே இந்திய பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் காணப்படும் 14 எண்ணெய் குதங்களை மீளப்பெறுவோம் என்று வாக்குறுதியளித்த அமைச்சர் கம்மன்பில, தற்போது எஞ்சியுள்ள 61 எண்ணெய் குதங்களையும் இந்தியாவிற்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்திய பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் 14 எண்ணெய் குதங்கள் ஏற்கனவே குத்தகைக்கு வழங்கப்பட்டன. அந்த குத்தகைக் காலம் அண்மையில் நிறைவடையவுள்ளது. ஆனால் குத்தகைக் காலத்தை மேலும் 50 ஆண்டுகளுக்கு நீடிப்பதற்கு தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் காணப்படும் 24 எண்ணெய் குதங்களை தவிர்ந்த எஞ்சியுள்ள 61 எண்ணெய் குதங்களின் உரிமத்தையும் இந்தியாவிற்கு தாரை வார்ப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு வெளியாகும் என்பதை உணர்ந்து கொண்டுள்ளமையின் காரணமாகவே 'ட்ரிங்கோ பெற்றோலியம் டேர்மினல்' என்ற கூட்டு நிறுவனத்தை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் ஊடாக எஞ்சியுள்ள 61 எண்ணெய் குதங்களின் 51 வீத உரிமம் இலங்கைக்கும் , 49 வீத உரிமம் இந்தியாவிற்கும் காணப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அது உண்மையல்ல. 61 எண்ணெய் குதங்களையும் படிப்படியாக இந்தியாவிற்கு வழங்குவதற்கான நடவடிக்கையே இந்த கூட்டு நிறுவனத்தின் ஊடாக முன்னெடுக்கப்படுகிறது.
இது இந்தியாவிடம் முழுமையாக நாட்டைக் காட்டிக்கொடுக்கும் செயற்பாடாகும். இது மாத்திரமின்றி தேசிய பாதுகாப்பில் அங்கத்துவம் வகிக்கும் மின்சாரத்துறை, துறைமுகம் மற்றும் பெற்றோலியத்துறை என்பவற்றையும் அரசாங்கம் சர்வதேசத்திற்கு காட்டிக் கொடுத்துள்ளது.
நாட்டை பாதுகாப்பதாகக் கூறிய தேசப்பற்றாளர்கள் அதனை முற்றாக காட்டிக் கொடுத்துள்ளனர். இது பாரதூரமான தேசிய குற்றச் செயலாகும். சிங்கப்பூர் மற்றும் டுபாய் ஆகிய நாடுகளைப் போன்று எரிபொருளை விநியோகிகக் கூடிய திறனும் வளமும் இலங்கைக்கும் காணப்படுகிறது. எனவே திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்தியாவிற்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வீதிக்கு இறங்கி தமது எதிர்ப்பினை வெளியிட வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment