(எம்.மனோசித்ரா)
அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் நாட்டில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது. நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய தகுதியும் அரசாங்கத்திற்கு இல்லை. எனவே நாட்டு மக்கள் தற்போதைய அரசாங்கத்தை சிம்மாசனத்திலிருந்து இறக்கி அதன் ஊடாக சிறந்த பாடத்தை புகட்ட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
ஜே.வி.பி. தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.
அதனால் நாட்டில் எவ்வித மாற்றமும் ஏற்படப் போவதில்லை. அமைச்சரவை மாற்றம் என்றால் ஏற்கனவே பதவி வகிக்கும் கோமாளிகளே மீண்டும் வேறு அமைச்சுக்களுக்கு மாற்றப்படுவர். இதனால் எவ்வித தீர்வையும் எம்மால் எதிர்பார்க்க முடியாது.
நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்த இந்த அரசாங்கத்திற்கு தகுதி இல்லை. எனவே இவர்களை ஆட்சி அதிகாரத்திலிருந்து வெளியேற்றுவதற்கு மக்கள் தயாராக வேண்டும். நாட்டை மேம்படுத்தி மீண்டும் அதனைக் கட்டியெழுப்பக் கூடியவர்களிடம் ஆட்சியைக் கையளிக்க வேண்டும். அவ்வாறு நாட்டை மீண்டும் கட்டியெழுப்பக் கூடிய பலம் எமக்கு காணப்படுகிறது. அதற்கு எம்முடன் கைகோர்க்குமாறு மக்களை கோருகின்றோம்.
தற்போதுள்ள நிலைமையிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்புவதென்பது இலகுவான விடயமல்ல. எவ்வாறிருப்பினும் இவ்வுலகில் முடியாதது என்ற ஒன்று இல்லை. எம்மிடம் அதற்கான திட்டமிடல்கள் உள்ளன. அதற்கு முதலில் ஊழல் மோசடிகள் முற்றாக இல்லாதொழிக்கப்பட வேண்டும். மோசடிகள் ஊடாக கொள்ளையடிக்கப்பட்ட நாட்டின் பணம் மீளப் பெறப்பட வேண்டும்.
தொடர்ந்தும் கடன் பெற்றுக் கொண்டிருக்காமல் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவிக்க வேண்டும். போலியான வியத்மகவைப் போன்றல்லாது எம்மிடம் சிறந்த நிபுணர்கள் உள்ளனர். எனவே தற்போதைய அரசாங்கத்தை சிம்மாசனத்திலிருந்து கீழே இறக்கி மக்கள் அதன் ஊடாக சிறந்த பாடத்தை புகட்ட வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment