இந்தியப் பிரதமர் மோடிக்கு அனுப்புவதற்காக திருத்தப்பட்ட வரைபை நிராகரித்தது இலங்கைத் தமிழரசுக் கட்சி : சம்பந்தனை நேரில் சந்தித்து விளக்கமளித்தார் சுமந்திரன் - News View

About Us

About Us

Breaking

Monday, January 3, 2022

இந்தியப் பிரதமர் மோடிக்கு அனுப்புவதற்காக திருத்தப்பட்ட வரைபை நிராகரித்தது இலங்கைத் தமிழரசுக் கட்சி : சம்பந்தனை நேரில் சந்தித்து விளக்கமளித்தார் சுமந்திரன்

(ஆர்.ராம்)

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்காக தமிழ் பேசும் கட்சிகள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளும் வகையில் மீண்டும் திருத்தப்பட்ட வரைவினை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு ஏகோபித்து நிராகரித்துள்ளது.

குறித்த தீர்மானம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு நேரடியாக அறிவிக்கப்பட்ட நிலையில் அவரும் அதனை ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளதோடு, ஏனைய கட்சித் தலைவர்களுக்கு உடனடியாக அறிவிக்குமாறும் கூறியுள்ளார்.

முன்னதாக கொழும்பில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் கடந்த 31ஆம் திகதி நடைபெற்ற தமிழ் பேசும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைவாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளும் வகையிலான வரைவொன்றை தயாரிப்பதற்காக நேற்றுமுன்தினம் சனிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனின் இல்லத்தில் கட்சித் தலைவர்கள் ஒன்று கூடியிருந்தனர்.

இதன்போது, கடந்த 21ஆம் திகதி குளோபல் டவர்ஸ் விடுதியில் அனைத்து தலைமைகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு இறுதி செய்யப்பட்ட வரைவு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வரைவு, ரெலோவினால் தயாரிக்கப்பட்ட ஆரம்ப வரைவு உள்ளிட்ட அனைத்தையும் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது.

அதன் பிரகாரம், ஏற்கனவே தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்களால் இணக்கம் காணப்பட்டிருந்த 7 பக்கங்களைக் கொண்ட ‘தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதும் இலங்கை இந்திய ஒப்பந்தமும்’ என்ற தலைப்பிலான வரைவின் தலைப்பு ‘தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளுக்கான ஆட்சி அதிகாரப் பகிர்வு’ என்று மாற்றியமைக்கப்பட்டது.

அத்துடன், அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தத்தினை முழுமையாக அமுல்படுத்துதல், (குறிப்பிட்ட காலக்கட்டத்தில் மீண்டும் மத்திய அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட அதிகாரங்கள்; ஆகியவற்றை மீள வழங்கி ஆரம்பத்திலிருந்தவாறாக, அதிலிருந்து (13ஆவது திருத்தம்) அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை அடைவதற்காக கட்டியெழுப்புதல் 1987ஆம் ஆண்டு முதல் முதல் அரசாங்கத்தின் அனைத்துப் பிரிவுகளாலும் செய்யப்பட்ட தெளிவான உறுதிமொழிகளை செயற்படுத்தல் ஆகியன பிரதான விடயங்களாக இணைக்கப்பட்டிருந்தன.

ஏற்கனவே தலைவர்களால் இணக்கம் காணப்பட்ட வரைவில் உள்ள சுயநிர்ணய உரிமை, இணைந்த வடக்கு கிழக்கு ஆகிய விடயங்கள் நீக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் குறித்த மீள் திருத்தம் செய்யப்பட்ட வரைவு நேற்றுமுன்தினம் மாலையிலேயே பிரதமர் மோடிக்கு கூட்டு ஆவணத்தினை அனுப்பும் செயற்பாட்டில் பங்கேற்றுள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பந்தனிடத்தில் சுமந்திரன் நேரடியாக சென்று கையளித்திருந்தார்.

அவசரமாகக் கூடிய தமிழரசின் அரசியல்குழு
இப்பின்னணியில், நேற்றுமுன்தினம் மாலை 7 மணியளவில் மெய்நிகர் வழியாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு கூடியது.

மாவை.சோ.சேனாதிராஜா தலைமையில் கூடிய இந்த அரசியல் குழுவில், சீ.வீ.கே.சிவஞானம், குலநாயகம், சிறீதரன், சுமந்திரன், சத்தியலிங்கம், பொன்.செல்வராஜா, துரைராஜசிங்கம், கலையரசன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். கே.வி.தவிராசா, கனகசபாபதி ஆகியோர் பங்கேற்றிருக்கவில்லை.

இந்நிலையில், இக்கூட்டத்தில் மீள் திருத்தப்பட்ட வரைவு சுமந்திரனால் சமர்பிக்கப்பட்டது. அது தொடர்பில் நீண்ட ஆராய்வுகள் செய்யப்பட்டன. உறுப்பினர்கள் பலவிதமான கருத்துக்களை தெரிவித்தார்கள்.

ஈற்றில் மீள் திருத்தம் செய்யப்பட்ட வரைவினை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் ஏற்கனவே 21ஆம் திகதி தமிழ் பேசும் கட்சித் தலைவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு இறுதி செய்யப்பட்டு 22ஆம் திகதி செம்மைப்படுத்தப்பட்டு அனைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்ட‘தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதும் இலங்கை இந்திய ஒப்பந்தமும்’ என்ற தலைப்பை உடைய வரைவிற்கே இணங்க முடியும் என்றும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், குறித்த தீர்மானத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு தெரிவிக்கும் படியும் அப்பணியை சுமந்திரன் முன்னெடுப்பதாகவும் இணக்கம் காணப்பட்டது.

சம்பந்தனை நேரில் சந்தித்த சுமந்திரன்
இவ்வாறான நிலையில் நேற்று ஞயிற்றுக்கிழமை முற்பகலில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை, சுமந்திரன் எம்.பி நேரில் சென்று சந்தித்தார்.

அதன்போது, தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தின் ஏகமனதான தீர்மானத்தினையும் கூறினார். இதன்போது, சம்பந்தன் அத்தீர்மானத்தினை ஏற்றுக் கொள்வதாக கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து, கருத்து தெரிவித்த சுமந்திரன், “மீள் திருத்தம் செய்யப்பட்ட வரைவினை தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு நிராகரித்துள்ளது என்பதையும் ஏற்கனவே இணக்கம் காணப்பட்ட வரைவினையே ஏற்றுக் கொள்ள முடியும் என்றும் எடுக்கப்பட்ட ஏகோபித்த தீர்மானத்தினை நான் ஐயாவிடம் (சம்பந்தன்) தெரிவித்தேன். அவரும், தானும் அதே நிலைப்பாட்டில் உள்ளதாக என்னிடத்தில் கூறினார்.

எனினும், கட்சியின் தீர்மானம் மிகவும் முக்கியமானது என்பதால் அதனை எதிர்பார்த்திருந்தேன் என்று கூறினார். இதன்போது, எனது நிலைப்பாடும் அவ்வாறனதுதான் என்பதை ஐயாவிடத்தில் (சம்பந்தனிடத்தில்) குறிப்பிட்டேன். அதன் பின்னர் எமது கட்சியின் தீர்மானத்தினை ஏனைய தலைமைகளுக்கு அறிவிக்குமாறு என்னிடத்தில் கோரியிருந்தார். அதற்கு அமைவாக நான் ஏனைய தலைவர்களுக்கு அவ்விடத்தினை வெளிப்படுத்தியுள்ளேன்” என்றார்.

No comments:

Post a Comment