(ஆர்.யசி)
அவசியமான நேரத்தில் சரியான தீர்மானம் எடுக்காது தவறவிட்டமையே நாடு நெருக்கடிக்குள் சிக்க காரணமாகும். இப்போது தீர்மானம் எடுப்பதால் பிரச்சினைகளில் இருந்து விடுபட முடியாது. ஆகவே அரசாங்கத்தில் தீர்மானம் எடுக்கும் நபர்களை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்தார்.
நாட்டின் நெருக்கடி நிலைமைகள் குறித்தும், அரசாங்கத்தின் ஒரு சில தவறான தீர்மானங்கள் குறித்தும் தனது விமர்சனத்தை முன்வைக்கும் போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு என்பன மக்களை வெகுவாக பாதித்துள்ளது.
மரக்கறிகள் விலை அதிகரிப்பு, எரிவாயு தட்டுப்பாடு, உரப் பிரச்சினை என மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் விதத்தில் அரசாங்கத்தின் மோசமான தீர்மானங்கள் அமைந்துள்ளன. இதற்கு விவசாயத்துறை அமைச்சர், வர்த்தகத்துறை அமைச்சர் மற்றும் மேலிடத்தில் தீர்மானம் எடுக்கும் நபர்கள் பொறுப்புக்கூறியாக வேண்டும்.
நெருக்கடியான நிலைமைகளில் எடுக்கக்கூடாத தீர்மானங்களை எடுக்கின்றமையும், அனாவசியமான தீர்மானங்களை நடைமுறைப்படுத்துகின்றமை போன்ற செயற்பாடுகளே இன்று நாடு நெருக்கடியில் சிக்கிக் கொள்ள பிரதான காரணமாகும். கடன்களில் இருந்து நாட்டை மீட்க முடியாது.
மேலும், கடன்களை பெற்றுக் கொண்டு இறுதியாக எமது மக்களை வேறு நாடுகளுக்கு கொத்தடிமைகளாக மாற்றும் நோக்கம் ஆட்சியாளர்களுக்கு உள்ளதா என்ற கேள்வி எம்மத்தியிலும் எழுந்துள்ளது.
அரசாங்கத்தில் நாம் இருந்தாலும் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளில் திருப்தியில்லை என்பதை வெளிப்படையாக கூறியுள்ளோம். ஒரு சிலர் எடுக்கும் தவறான தீர்மானங்களே இதற்கு காரணமாகும்.
நாம் அரசாங்கத்தில் இருந்தாலும் தீர்மானம் எடுக்கும் இடத்தில் நாம் இல்லை. தவறான கொள்கைகளை உருவாக்கி அதற்கு ஏற்றால் போல் முட்டாள்த் =தனமாக தீர்மானங்களை எடுத்தவர்கள் மக்களுக்கு பதில் கூறியாக வேண்டும். இல்லையேல் முழுமையாக இந்த நிலைமைகளை மாற்றியமைக்க வேண்டும்.
தீர்மானம் எடுக்கும் நபர்களை மாற்ற வேண்டிய சூழ்நிலைக்கும் தள்ளப்படலாம். இன்று நாடு முகங்கொடுக்கும் நெருக்கடிகளுக்கு மத்தியில் எம்மால் நீண்ட காலம் பயணிக்க முடியாது. இவற்றை சமாளிக்க சரியான நேரத்தில் எந்தத் = தீர்மானமும் எடுக்கப்படவில்லை. நல்ல வாய்ப்புகளை தவற விட்டுள்ளோம் என்றார்.
No comments:
Post a Comment