வீட்டு வேலைகளில் ஈடுபடும் தொழிலாளர்களை ஊழியர் சேம இலாப நிதியம் (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) ஆகியவற்றுக்குள் உள்வாங்குவதற்குத் தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவாதாகவும், அவர்களையும் இந்நாட்டின் ஊழியர் சேம இலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றுக்கு பங்களிப்பவர்களாக உருவாக்குவது அவசியம் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
தொழில்புரியும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் அடக்கு முறைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து ஆசிய ஊடக மற்றும் கலாச்சார சங்கம் (AMCA), இலங்கை சொலிடாரிட்டி நிலையம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த ஊடக செயலமர்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த செயலமர்வின்போது, சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தினால் கொண்டு வரப்பட்டுள்ள ILO 190 மற்றும் ILO 189 விடயங்கள் தொடர்பில் ஆழமாக கலந்துரையாடப்பட்டது.
இந்த சட்டங்கள் இலங்கையில் நடைமுறைப்படுத்தபட்டால், இலங்கையில் தொழில் புரியும் வர்க்கத்திற்கு எதிரான அடக்கு முறைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் இல்லாதொழிப்பது, தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் அதன் மூலம் கிடைக்கும் சலுகைகள் குறித்தும் பெருவாரியாக கலந்துரையாடப்பட்டது.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் கூறுகையில், "தொழில் புரியும் இடங்களில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமை மற்றும் அடக்குமுறைகள் இடம்பெறுவதைக் குறைத்துக் கொள்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையினால் நிறைவேற்றப்பட்டு சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தினால் கொண்டு வரப்பட்டுள்ள ILO 190 மற்றும் ILO 189 ஆகிய யோசனைகளை இலங்கைக்குள் நடைமுறைப்படுத்துவதற்கு சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் நாடென்ற அடிப்படையில் இலங்கை கடமைப்பட்டுள்ளது.
ஆகவே, இது தொடர்பாக நிலைமை மற்றும் பின்புலம் ஆகியவற்றை அமைச்சரவைக்கு அறிவித்ததை அடுத்து, இதனை ஏற்றுக்கொண்டு முன்னோக்கி எடுத்துச் செல்வதற்காக பாராளுமன்றில் முன்வைத்துள்ளேன்.
எனினும், இந்த செயற்திட்டத்தின்போது எம்மால் எடுக்கப்பட வேண்டிய படிமுறைகள் அதிகளவில் உள்ளன. எமது நாட்டில் உள்ள சட்ட திட்டங்களுக்கு அமைவாக இதனை எவ்வாறு நடைமுறைபடுத்துவது என்ற கேள்வி எழுகிறது. அதில் உள்ள நடைமுறைத்தன்மை என்ன? மேலும், இது தொடர்பாக பல்வேறு விதமான கருத்துக்களும் உள்ளன.
விசேடமாக, இந்த யோசனைகளை ஏற்றுக்கொண்ட உலக நாடுகள் சில உள்ளன. குறித்த அந்த நாடுகள் இவ்விடயம் தொடர்பாக சட்டத் திட்டங்களில் செய்துள்ள மாற்றங்கள் தொடர்பில் ஆழமாக ஆராய்ந்து, எமது நாட்டில், எமது கலாச்சாரத்துக்கு, எமது வேலைத்தளங்களுக்கு ஏற்புடையதான இதனை செய்து கொள்வதற்காக எங்களுக்கு தேசிய ரீதியானதும் விரிவானதுமான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டியது அவசியமாகும்.
அது போலவே, அரச மற்றும் தனியார் துறைகளில் தொழில் புரியக்கூடிய இரண்டு தரப்பு தொழிலாளர்களையும் உள்ளீர்க்கும் வகையில், இந்த சட்டம் இயற்றப்பட வேண்டும்.
மேலும், குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமைகள் தொடர்பாக தண்டனை வழங்கக்கூடிய முறைகள் குறித்து விசேட நிபுணர்கள் அடங்கிய குழுவினரால் எமக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும், அது தொடர்பான முறைப்பாடுகள் மிகவும் குறைவாகவே பதியப்படுகின்றன. ஆகவே, பாலியல் வன்கொடுமைகள் மற்றும் அடக்கு முறைகள் தொடர்பாக தேடிப்பார்ப்பதற்கான வழிமுறையொன்றை தொழில் ஆணையாளருக்கு வழங்கப்பட வேண்டும்.
இது தொடர்பாக துறைசார் நிபுணர்கள் குழுவினால் குறிப்பிட்டுள்ள விடயங்கள் தொடர்பாக இனிவரும் காலங்களில் நாங்கள் பிரிதொரு குழுவின் ஊடாக பேச்சுவார்த்தை நடத்தி, தேவையான சட்டத் திட்டங்களை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க முடியும்" என்றார்.
No comments:
Post a Comment